ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக புஞ்சை பாசனத்திற்கு கீழ்பவானித் திட்ட பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மூலமாக 1,03,500 ஏக்கர் பாசனத்திற்கு 5 சுற்று முறையாக தண்ணீர் திறந்து விடப்படும் என அரசாணை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து கடந்த 4ம் தேதி 4வது முறை தண்ணீர் திறப்பு நிறைவடைந்த நிலையில் பவானிசாகர் அணையில் குறைந்தபட்ச நீர் இருப்பு போக மீதமுள்ள தண்ணீர் ஜூன் 30 வரை குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதால், 5வது சுற்று முறை பாசனத்திற்கு தண்ணீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுப்பணித் துறையினர் திறக்கவில்லை.
இதற்கிடையே பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி பாசன விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து எள், கடலை, மக்காச்சோளம், சோளம், உளுந்து போன்ற பயிர்களை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில், பாசனத்திற்கு விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதால் புஞ்சை பாசன பகுதியில் போதுமான தண்ணீர் இல்லாமல் பயிர் கருகும் நிலையில் உள்ளது.
இதனையடுத்து தண்ணீர் திறந்து விடக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீர்வள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் நேற்று இரவு திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் திறந்து விடப்படும் என அரசாணை அறிவித்த பின்னர் தண்ணீர் திறந்து விடப்படாது என அரசு கூறுவது ஏற்புடையதல்ல என விவசாயிகள் கூறினர்.
இதனால் விவசாயிகளுக்கு பாசனத்திற்கு போதுமான தண்ணீரை 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
தொடர்ந்து, விவசாயிகளிடம் நீர்வளத்துறை அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பாசன விவசாயிகள் தண்ணீர் திறந்து விடும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி நேற்று இரவு முதல் அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் விடிய விடிய இந்த போராட்டம் நீடித்தது. இதைத்தொடர்ந்து, இன்று 2வது நாளாக பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்தனர்.
0 coment rios: