ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

திமுக வேட்பாளரை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்: உதயநிதி

ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாசை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஈரோட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பகுதியில் திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து திறந்த வேனில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:-

இன்று (அதாவது நேற்று) 15வது நாள் பிரசாரம் இது 27வது தொகுதி. தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருவார். இங்கு வீடு எடுத்து தங்கினாலும் தமிழகத்தில் பா.ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. இது பெரியார் பிறந்த மண். நாம் அனைவரும் சுயமரியாதை மிகுந்தவர்கள். எனவே நீங்கள் கண்டிப்பாக பா.ஜனதாவுக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். உதயசூரியனுக்கு வாக்களிக்க நீங்கள் அனைவரும் முடிவு செய்து விட்டீர்கள்.

ஈரோடு தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இளைஞர் அணி துணைச் செயலாளர் என்று பெயர் தான். ஆனால் அவர் (வேட்பாளர் பிரகாஷ்) எனக்கு சீனியர். சிறப்பாக இளைஞர் அணி பணிகளை செய்பவர். சேலம் மாநாட்டின் வெற்றிக்காக கடினமாக உழைத்தவர்.

திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி ரூ.482 கோடி மதிப்பீட்டில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத் தில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் கான்கிரீட் சாலைகள் போடப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோலாரில் 20 ஏக்கர் பரப்பளவில் புறநகர் பேருந்து நிலையம் ரூ.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் மற்றும் தாளவாடி பகுதிகளில் புதிதாக அரசு கலைக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட வர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை சிப்காட்டில் புதிதாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் புற்றுநோய் மையம் அமைக்கப்படும். சோலார் பகுதியில் ரூ.20 கோடி செலவில் காய்கறி வணிக வளாகம் அமைக்கப்படும். ஈரோடு வஉசி பூங்கா ரூ.15 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப் படும். அந்தியூர், பர்கூர், தாளவாடி, ஆசனூர், தலமலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5 கோடி செலவில் இணைப்பு சாலைகள் போடப்படும். சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.20 கோடி செலவில் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்படும். மஞ்சள் மற்றும் மஞ்சள் சார்ந்த மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்யும் வகையில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். கொடுமணல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

இவை அனைத்தும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தொகுதிக்கு கொடுத்திருக்கும் வாக்குறுதிகள். இதேபோல் 'இந்தியா கூட்டணி' ஆட்சி அமைத்தால் கியாஸ் சிலிண்டர் ரூ.500-க்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.75க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.65க்கும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனதா, தமிழகத்துக்கு ஏதாவது ஒரு திட் டத்தை கொண்டு வந்திருக்கிறார்களா? எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மதுரையில் கடந்த 2019-ம் ஆண்டு ஒரு செங்கலை நட்டு வைத்தனர். அதோடு சரி. அதன் பின்னர் அந்த திட்டத்துக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.

அங்கு நட்டு வைத்திருந்த அந்த ஒரு செங்கலையும் நான் எடுத்து வந்துவிட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கும் வரை அந்த செங்கலை நான் கொடுக்க மாட்டேன். அனைத்து இடங்களிலும் அந்த செங்கலை காட்டுவதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். நான் அந்த செங்கலை காட்டுகிறேன். ஆனால் அவர் பல்லைத்தான் காட்டுகிறார். நாம் 1 ரூபாய் ஜி.எஸ்.டி. கொடுத்தால் மத்திய அரசு நமக்கு 29 பைசா மட்டுமே திருப்பி தருகிறது. ஆனால் பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களான உத்தரபிரதேசத்துக்கு 3 ரூபாயும், பீகாருக்கு 7 ரூபாயும் திருப்பி கொடுக்கிறது.

நாம் கொடுக்கும் ஜி.எஸ்.டி.யை அப்படியே நமக்கு திருப்பி கொடுத்தாலே போதும். இதுபோன்று பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

இதில், அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் செல்வராஜ் எம்பி, ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திமுக மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: