நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் பொறுப்பு அதிகாரி பூபாலன் தலைமையில் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தியூர் ரைஸ் மில் வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் அனுமதியின்றி தற்காலிக தேர்தல் அலுவலகம் திறந்து உள்ளதாக பூபாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பூபாலன் தலைமையில் நிலை கண்காணிப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, ரைஸ்மில் உரிமையாளர் விஜயன் என்பவரிடம் விசாரணை நடத்திய போது நேற்று காலை 11:30 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகானந்தம் மற்றும் சிலர் வந்து தற்காலிக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்ததாக தெரிவித்தார். இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவர் தற்காலிக தேர்தல் அலுவலகம் திறப்பதற்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்து இருந்தது தெரியவந்தது. அதற்கு அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் இன்று முதல் தற்காலிக தேர்தல் அலுவலகம் திறந்து கொள்ள அனுமதி அளித்திருப்பதும் தெரிய வந்தது.
எனினும், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் முருகானந்தத்தை அழைத்து வந்து முன்கூட்டியே நேற்று தேர்தல் அலுவலர் உத்தரவை பின்பற்றாமல் அலுவலகத்தை திறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நிலை கண்காணிப்பு குழுவினர் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் அந்தியூர் போலீசார் பாரதிய ஜனதா வேட்பாளர் முருகானந்தம் மற்றும் தெய்வசிகாமணி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 coment rios: