செவ்வாய், 16 ஏப்ரல், 2024

மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க தமிழகம் வருகிறார் மோடி: ஈரோட்டில் உதயநிதி பேச்சு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொடுமுடி அருகே உள்ள ஒத்தக்கடையில் திமுக சார்பில் நடைபெற்ற பிரசார பரப்புரைக் கூட்டத்தில் ஈரோடு நாடாளுமன்றத் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு பதிவு பெட்டியில் 3வது இடத்தில் நமது உதயசூரியன் சின்னம் உள்ளது. ஆனால் ஜூன் 4ம் தேதி நாம் முதலிடத்திற்கு வர வேண்டும். நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும். ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் எம்பி கணேசன் மூர்த்தியை கடந்த தேர்தலில் 2.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்தீர்கள்.

இந்த முறை நமது வேட்பாளர் கே.இ. பிரகாஷை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 2021-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியை நாம் இழந்தோம். இருந்தாலும் நமது முதலமைச்சர் அந்த தொகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி கூறினார். இங்கு மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோலார் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சோலாரில் உலகத்தரம் மிக்க விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் எண்ணற்ற பணிகள் இந்த பகுதியில் நடந்து வருகிறது. 2014ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் விலை எவ்வளவு இருந்தது. தற்போது எவ்வளவு உள்ளது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளனர். ஆனால் இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

இதேபோல் பெட்ரோல் விலை ரூ.75க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். டீசல் விலையும் 65-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். கண்டிப்பாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். நமது முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். யார் காலையும் பிடிக்கவில்லை. தவழ்ந்து தவழ்ந்து வரவில்லை. அப்படி முதலமைச்சர் ஆனவர் யார் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு பாதம் தாங்கி பழனிசாமி என்று பெயர் வைத்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று தான் முதல்வரானார்.

பாஜகவுடன் 4 வருடங்கள் கூட்டணியில் இருந்து விட்டு தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி ஆகிய உரிமையை எடப்பாடி பழனிசாமி விட்டு கொடுத்தார். இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார். கலைஞர் இருந்த போது நீட் தமிழகத்திற்கு வரவில்லை. பிறகு ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விற்கு பயந்து நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டனர். இதன் விளைவு இதுவரை 7 ஆண்டுகளில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலைமைகள் இருந்தது.

இதற்கு முதல் பலி அனிதா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1200-க்கு 1170 மதிப்பெண் எடுத்தார். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் அவர் ஒரு டாக்டர். திமுக ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட ரீதியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நான்கு பேர் மட்டுமே நாடாளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டார்கள். தி.மு.க. தலைவர் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை ஆகியவை குறைத்தார்.

பிஎம் மூலம் கொரோனா காலத்தில் பிரதமர் 32 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இதுவரை கணக்கு காட்டவில்லை. சென்னை, தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது 2,500 கோடி ரூபாய் மாநில அரசு நிதி வழங்கியது ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இதனால் பிரதமரை 29 பைசா என்று சொல்லி தான் அழைக்க வேண்டும். ஜி.எஸ்.டி மூலம் வசூல் செய்யப்படும் மத்திய அரசு முறையாக சரிசமமாக மாநிலத்திற்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை.

கடந்த முறை தமிழகத்தில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல இந்த முறை 40க்கு 40 வெற்றி பெற்று தமிழர்கள் மானமிக்க சுயமரியாதை உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க வருகிறார். 2019ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டு நான் சென்று பார்த்த போது ஒரு செங்கல் மட்டுமே இருந்தது.

இது வடிவேலு திரைப்பட பாணியில் கிணற்றை காணவில்லை என்பது போல உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினால் கோபம் வருகிறது விட்டால் என்னை அடித்து விடுவார் போல இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதை விட்டு மோடியிடம் பல்லை காட்டுகிறார். எடப்பாடி பழனிசாமி அடிமை ஆட்சி நடத்திவிட்டு இப்போது தேர்தல் வந்தவுடன் பாஜக- அதிமுக கூட்டணி இல்லை என்று நாடகம் ஆடுகிறார்கள். ஆளுநர் பாஜகவின் கைபாவையாக உள்ளார்.

தேசிய கீதமும், தமிழ் தாய் வாழ்த்தும் முக்கியம் என்று சொன்ன தலைவர் நம் தலைவர் ஸ்டாலின். அண்ணா வைத்த தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என சொன்னவர் ஆளுநர். மத்திய அரசு வழங்கும் 29 பைசாவை வைத்து கொண்டு இவ்வளவு நல்லது செய்யும் நிலையில் தேவையான நிதியை வழங்கும் ஆட்சி வந்தால் தமிழகத்திற்கு எப்படியெல்லாம் நலத்திட்டங்களை செய்யலாம் என்று நினைத்து பாருங்கள். இந்திய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் அடிமை அதிமுகவை விரட்டி அடித்தது போல இந்த முறை அதிமுக எஜமானர்கள் பாஜக விரட்டி அடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: