திங்கள், 6 மே, 2024

சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து

கோவை கொடிசியாவில் இருந்து 810 கிலோ தங்க நகைகள் பாதுகாப்பு பெட்டக வசதியுடன் கூடிய சரக்கு வாகனம் ஒன்று சேலம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அப்போது, ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சமத்துவபுரம் மேடு பகுதியில் வந்தபோது பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது, வாகனத்துக்கு முன்னால் சென்ற லாரியின் மேல் மூடப்பட்டிருந்த தார்பாய் கழன்று, காட்டில் பறந்து வந்து சரக்கு வாகனத்தின் முன்பகுதியில் மூடிக்கொண்டதாக தெரிகிறது.

இதனால், நிலை தடுமாறிய ஓட்டுநர் இடது புறமாக திரும்பிய போது வாகனம் சாலையில் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஓட்டுநர் சசிகுமார், பாதுகாவலர் பால்ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். பின்னர், இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தங்க நகை நிறுவனத்தினர் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், மீட்பு வாகன உதவியுடன் சரக்கு வாகனத்தை மீட்டு சித்தோடு காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.

அங்கு, ஆவணங்கள் அனைத்தும் சரிபார்த்து மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு அதில் சேலத்திற்கு மீண்டும் நகைகள் எடுத்துச் செல்ல அனுமதித்தனர். வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் மதிப்பு சுமார் ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. சரக்கு வாகனத்தில் நகைகள் எடுத்துச் செல்வதற்கு என்று வடிவமைக்கப்பட்ட லாக்கர் வசதி இருந்ததால் நகைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , இந்த விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கோவை – சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: