பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், நடமாடும் நீர்மோர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் இவ்வாகனங்கள் சென்று கோடைகாலத்தில் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும். தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு, அரசு பீர் உற்பத்தியை அதிகரிக்க கூறவில்லை. ஆனால் பீர் வாங்குவோர் எண்ணிக்கை கோடை காலம் என்பதால் அதிகரித்துள்ளது. மற்ற மது வகைகளின் விற்பனை குறைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் குற்றச்சாட்டுக்கு, நீர்நிலைகளை தூர்வாரும் பணியை அரசு கைவிடவில்லை. ஆனால் அதில் பல சிக்கல்கள் உள்ளன. பவானிசாகர் அணையில் நேற்று பார்வையிட்டோம். அங்கு மண் படிந்துள்ளது. அதை அப்புறப்படுத்தினால் தண்ணீர் மட்டம் குறைந்து, தண்ணீர் சில இடங்களுக்கு வருவது நின்று விடும் என சிலர் எதிர்க்கின்றனர். பலவற்றையும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. பொதுவாக இது போன்ற பெரிய அணைகளில் வண்டல் மண் படிவது ஆலோசித்து தான் அவைகள் அகற்றப்படப்படுகின்றன.
மற்ற நீர்நிலைகளில் தூர்வாராததால் வறட்சி ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. ஈரோட்டில் அதிக வெப்பம் நிலவுகிறது. இதற்கு மரங்கள் வெட்டப்பட்டதை சிலர் காரணமாக கூறுகின்றனர். சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுகிறது. இந்த மரங்களை மாற்றி நடலாம். இது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு நடந்து வரும் பணியாகும். எனினும் மழைக்காலம் தூங்கும் போது ஈரோடு மாவட்டத்தில் பெரிய அளவில் மரம் நடும் விழா நடைபெற உள்ளது.
தற்போது எனது அலுவலகத்தில் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு தரப்படுகின்றன. அதை வாங்கி நட்டு பராமரிக்க வேண்டும். வீடுகளில் மரங்களை நட்டால் வீட்டு வரியில் சில சலுகை வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மக்களை காக்க சென்னையில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நீர்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று ஈரோடு மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சக்கரை கரைசல் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு தர உத்தரவிட்டுள்ளார். தேர்தல் காலம் என்பதால் நேரடியாக எங்களால் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் அரசு துறை மூலம் மக்களுக்கு அதை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கோபால், தங்கமுத்து, ரவிச்சந்திரன் ஈரோடு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
0 coment rios: