வெள்ளி, 31 மே, 2024

இந்திய தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற மோசமான தேர்தல் நடந்தது கிடையாது: ஈவிகேஎஸ் இளங்கோவன்

ஈரோட்டில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற மோசமான தேர்தல் நடந்தது கிடையாது. தேர்தல் ஆணையாளராக இருக்கின்ற மூன்று பேரும் பிரதமர் மோடியின் எடுபிடிகளாக மாறி விட்டனர். 1-ம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்கு முதல் நாள் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று சட்ட திட்டங்கள் உள்ளன. இவற்றை மதிப்பதில் முதன்மையான்வராக பிரதமர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது பிரதமராக இருக்கின்ற மோடி, தேர்தல் ஆணைய வழிமுறைகளை மீறி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதாக பிரதமர் மோடி ஆரம்பித்து இருக்கிறார். 

இதை எல்லா தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இது என்ன நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் 48 மணிநேரம் அமைதியாக இருந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான், வாக்குப்பதிவிற்கு 2 நாட்களுக்கு முன்பே பிரச்சாரத்தை தடை செய்திருக்கிறார்கள். இதுவரை அந்த நடைமுறை இருந்து வந்துள்ளது. ஆனால், இன்றைக்கு நடக்கும் தேர்தலில், விதிமுறைகள் பலவாறாக மீறப்படுவதற்கு பிரதமர் மோடி தான் காரணம். தேர்தல் ஆணையம் அவரது கைப்பாவையாக இருக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது, தேர்தல் ஆணையத்தில் இருக்கும் அதிகாரிகளில் தவறு செய்தவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவார்கள்.

பிரதமர் மோடி ஏன் தியானம் செய்கிறார் என்று எனக்கு புரியவில்லை. அதனால் என்ன கிடைக்கப்போகிறது என்று எனக்கு புரியவில்லை. பொதுவாக, தியானம், யாகம் செய்பவர்கள் எதை எதிர்பார்த்து செய்கிறார்களோ அது கிடைப்பது கிடையாது. 
உதாரணமாக 1924 – 25-ம் ஆண்டுகளில், வைக்கத்திலேயே தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் கோயில் முன்னாள் இருக்கின்ற சாலைகளில் செல்லக்கூடாது என்ற சட்டத்தை எதிர்த்து, போராடியபோது, காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பெரியார், அதிகமான தொண்டர்களுடன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது காமராஜர் ஒரு தொண்டராக அந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அந்த போராட்டத்தில் அவருக்கு 6 மாத சிறைதண்டனை கிடைத்தது. தண்டனை முடித்து, விடுதலை செய்யப்பட்ட போது, மீண்டும் அவர் அதே போராட்டத்தை ஆரம்பித்தால் மீண்டும், சிறையில் அவரைத் தள்ளினர். 

அதோடு, பெரியாரால் நமது அரசுக்கு பெரிய பிரச்சினைகள் வந்துவிடக்கூடும் என்பதற்காக அப்போது திருவிதாங்கூர் அரசராக இருந்தவர், பெரியாரை ஒழிக்க வேண்டும், பெரியாரின் வாழ்வை முடித்தாக வேண்டும் என்பதற்காக, யாகங்கள் செய்தார். தியானங்கள் செய்தார். இந்த யாகமும், தியானமும் முடிகின்ற சமயத்தில், பெரியாருக்கு மரணம் ஏற்படவில்லை. அந்த மகாராஜவிற்கு மரணம் ஏற்பட்டது.
யாகம், தியானம் செய்கின்றவர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாரை குறி வைக்கின்றீர்களோ, அந்த குறி தப்பி, உங்களையே தாக்கி விடும் நிலைமை ஏற்பட்டு விடும். ஆகவே, மோடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
1980-ம் ஆண்டு காந்தி படத்தைப் பார்த்தபின் தான், தனக்கு காந்தியைப் பற்றி தெரியும் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார். இவரை இந்தியர் என்று சொல்வதா? இவர் 3-ம் வகுப்பு கூட படிக்கவில்லை போலிருக்கிறது. 
காந்தியைத் தெரியவில்லை என ஆப்பிரிக்க நாடுகளில் கூட யாரும் சொல்ல மாட்டார்கள். உலக வரலாற்றில் கத்தி இன்றி, ரத்தம் இன்றி சாத்வீக வழியில் போராடி, நாடு சுதந்திரம் அடைய முடியும் என்று காந்தி வழிகாட்டினார்.
இதை ஏற்று பலர் சாத்வீக போராட்டம் நடத்தில் உலகில் விடுதலை பெற்றுள்ளனர். 

அடிமைகளாக இருந்தவர்கள், அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். 
அதற்கு காந்திதான் காரணம்.
 கருப்பு இன மக்களும், வெள்ளை இன மக்களும் சமம் என ஆபரஹாம் லிங்கன் போராடியது போல், அதைப்போல் வேகமாக போராடியவர் காந்தி. அமெரிக்காவில் ஒபாமா என்ற கருப்பர் ஜனாதிபதியாக வர முடிந்தது என்று சொன்னால், அது காந்தியால்தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
இது போன்ற வரலாற்று நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து விட்டு, பிரதமராக இருக்கிறவர் காந்தியைத் தெரியாது என்று சொன்னால், எவ்வளவு பெரிய அறிவிலியை நாம் பிரதமராக ஏற்றுக் கொண்டு இருகிறோம் என வெட்கப்பட வேண்டியுள்ளது. 

இந்த தேர்தலில் பிரதமர் மோடியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி நல்ல ஆட்சியைத் தரும். பூரி ஜெகந்நாதர் கோயில் விவகாரத்தில், ஒட்டுமொத்த தமிழர்களையும் திருடர்கள் என்று பிரதமர் மோடி சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் அப்படிச் சொல்லவில்லை என வார்த்தை ஜாலங்கள் சொல்லலாம்.
தமிழர்களைத் திருடர்கள் என்று சொன்ன மோடி, அடுத்தமுறை தமிழகம் வரும்போது, திருடர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என்பதை தமிழர்கள் உங்களுக்கு காண்பிக்க இருக்கிறார்கள்.
கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செல்வபெருந்தகை பேசி வருகிறார். நாங்களும், திமுகவும் கூட்டணியில் இருக்கிறோம். தீய சக்தியான பிரதமர் மோடியை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியான காரணத்திற்காக, நாம் ஒன்றாக இருந்து செயல்பட வேண்டும். ஸ்டாலின் நல்லாட்சியைத் தந்திருக்கிறார் என்று நான் ஈரோடு கூட்டத்தில் சொன்னேன். செல்வப்பெருந்தகையும் அதனை ஒப்புக் கொண்டு இருக்கிறார். இதில் பெரிய பிரச்சினை இருக்காது. 
ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வெண்டில் தான் நானும் படித்தேன். அங்குள்ள சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெயலலிதா ஜெபம் செய்தது எனக்குத் தெரியும். அங்கு இருந்த ஆசிரியர்களுக்குத் தெரியும். அதேபோல், முஸ்லீம்களின் இப்தார் நோன்பில் ஜெயலலிதா பங்கேற்றபோது நானும், மூப்பனார், நல்லகண்ணு போன்றோரும் பங்கேற்று இருக்கிறோம். 

ஆகவே, ஜெயலலிதாவைப் பொறுத்தவரை எம்மதமும், சம்மதம் என்ற கொள்கை உடையவர். அவரை ஒரு குறுகிய வட்டத்தில் அண்ணாமலை அடைக்கப் பார்க்கிறார் என்றால், அவரது அறியாமையும், அரசியல் வரலாறு தெரியவில்லை என்பதுதான் அர்த்தம்.
கஞ்சா குடிக்கும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒதுக்குப்புறமான இடங்களில் கஞ்சா பயிரிடுவது அந்த காலத்தில் சகஜமாக இருந்தது. ஆனால், இப்போது கஞ்சா குடிப்பது தமிழகத்தில் மட்டுமல்ல, பஞ்சாபில் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அங்குள்ள கிராமங்களில் எல்லாம் இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகி உள்ளனர். பெண்கள் கூட அடிமையாகி உள்ளனர். 
ஆக, கஞ்சா பழக்கம் ஆதியில் இருந்து இருந்து கொண்டு இருக்கிறது. கஞ்சாவை அந்த காலத்தில் மருந்திற்காக உபயோகப்படுத்தியுள்ளார்கள். 

தமிழகத்தில் கஞ்சா பரவலை முதல்வர் மு.க.ஸ்டாலின் இரும்பு கரம் கொண்டு அடக்குவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஈரோடு அரசு மருத்துவமனையில், ஸ்கேனிங், ரத்த பரிசோதனை மேற்கொள்ளும் வசதி இல்லை என்பது தொடர்பாக அமைச்சர் முத்துசாமியிடம் பேசியுள்ளேன். 
அவர் விரைவில் அதற்கான நடவடிக்கையை எடுப்பார் என நம்புகிறேன். நெல்லை காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க சில மாதங்கள் ஆகத்தான் செய்யும். விரைவில் தமிழக போலீஸார் அதனை கண்டுபிடிப்பார்கள்.
பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும்போதுதான் விடிவுகாலம் ஏற்படும். தேர்தல் முடிவுக்குப்பிறகு 26 கட்சிகளைச் சேர்த்த இண்டியா கூட்டணியினர் ஒன்று சேர்ந்து, பிரதமர் குறித்து முடிவு எடுப்பார்கள். 

ஸ்டாலினும், ராகுலும் யாரை நினைக்கிறார்களோ அவர்கள் பிரதமராக வர வாய்ப்புள்ளது. 
ஆண்டுக்கு ஒரு பிரதமர் என்று திருமாவளவன் சொல்லியிருகிறார். தேர்தலில் வெற்றி பெற்று எம்பியானால், அவரும் பிரதமராக வர வாய்ப்பிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஐந்து பிரதமர் எ:ன்பது வராது. ஒருவேளை அப்படி வந்தால் என்ன நஷ்டம்? அதிகாரிகள் மாற்றப்படுவதில்லையா? 10 ஆண்டுகளாக ஒரே பிரதமர் இருந்தும் பயனில்லை. 
ராகுல்காந்தியை பிரதமராக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. நாங்கள் விரும்புகிறோம். திமுகவும் அதை விரும்புகிறது. மற்ற கூட்டணித் தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் யார் பிரதமர் என்று தெரியவரும்.
தேர்தல் முடிவு வரும் 4-ம் தேதிக்கு பிறகு அண்ணாமலை எங்கு இருப்பார் என்பதை உறுதி செய்து கொண்டு அவர் மற்றவர்களைப் பற்றி பேசலாம். 
மோடியின் மீதுள்ள அன்பினால் சொல்கிறேன். தியானத்தை கைவிடுங்கள். கடைசியில் முடிவு வேறு மாதிரி வந்துவிடும். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அளித்த வாக்குறுதிகளை, அவர்கள் ஆளும் மாநிலங்களிலாவது குறைந்தபட்சம் நிறைவேற்றுவார். மம்தா மட்டுமல்ல ஒடிசா நவீன் பட்நாயக்கும் இந்த கூட்டணியில் வருவார்.

 வாரணாசியில் பிரதமர் மோடி வெற்றி பெற முடியாது. தமிழக அரசின் மின்சார கொள்கையில் சில குழப்பங்கள் உள்ளன. அதில் ஒருமித்த கருத்து ஏற்படுத்த வேண்டும். குறைகளை தீர்க்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார். 
அதிமுக ஆட்சியில் அதானியிடம் இருந்து மட்டமான நிலக்கரியை வாங்கி ரூ. 6000 கோடி ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து மோடியோ, அண்ணாமலையோ பேசவில்லை. இது தொடர்பாக விசாரணைக் கமிஷன் தேவையில்லை. ஊழல் செய்திருந்தால் சிறைக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: