வெள்ளி, 17 மே, 2024

ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது:

நாட்டில் 10 வருட காலமாக ஆட்சி செய்யும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் நமது இப்போதைய நோக்கமாகவும் உள்ளது. இதற்கு யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவித்து அவர்களது கரங்களை பலப்படுத்த வேண்டும். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு இருக்காது. இந்த நாட்டை காப்பாற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நமது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு உள்ளது.

மீண்டும் காமராஜர் ஆட்சி வேண்டும் என்கின்றனர். பாசிசம், சமூக நீதிக்கு எதிரான ஆட்சி எங்கெல்லாம் நடக்கிறதோ அது எல்லாமே காமராஜர் ஆட்சி தான். அந்த வகையில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ள திராவிட மாடல் ஆட்சியை காமராஜர் ஆட்சி எனச் சொல்வதில் எனக்கு சிறிதும் தயக்கம் கிடையாது.

இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் அண்ணாமலை, சீமான், இபிஎஸ், ஓபிஎஸ் போன்றோர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிடக்கூடாது. அவ்வாறு வந்துவிட்டால் நம்முடைய நிலைமை என்னவாகும் என்பதை விட, நமது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெயர் முக்கியம் கிடையாது. செய்கின்ற காரியம் தான் முக்கியம். இன்றைக்கு முதலமைச்சரின் மகளிர் உரிமை தொகை. மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை மற்றும் குழந்தைகளுக்கான காலை உணவு திட்டம் என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால் தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டுள்ளது. அது தொடரவும், பாசிச பாஜக ஆட்சியை தூக்கியெறியவும் நமது தோழமை கட்சியினருக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பேசினார்.শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: