ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபரிடம் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு எம்எல்ஏ பேசுவதாக் கூறி நன்கொடை கேட்டு உள்ளார். ஏற்கனவே எம்எல்ஏவின் செல்போன் எண் அந்த தொழில் அதிபரிடம் இருந்ததால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட எம்எல்ஏவுக்கு செல்போனில் அவர் தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் பணம் கேட்க வில்லை என்று கூறினார்.
இது தொடர்பாக அந்த தொழில் அதிபர் ஈரோடு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோட்டை சேர்ந்த ஒரு தொழில் அதிபரிடம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.50 ஆயிரம் பெற்று மோசடி செய்ததும், மற்ற 2 தொழில் அதிபர்களிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, அந்த வங்கி கணக்கு விவரங்கள், செல்போன் சிக்னல்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மோசடி நபர் திருச்சியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த ரவி (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 செல் போன்கள், 3 சிம் கார்டுகள், 12 தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண்கள் அடங்கிய புத்தகம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆன்லைனில் வர்த்தகம், வேலைவாய்ப்பு, லோன் தருவது, கிரிடிட் கார்ட் லிமிட் அதிகப்படுத்தி தருவது, பான், ஆதார் கார்டு ஆகியவற்றை வங்கி கணக்கில் சேர்ப்பது, தனது பெயரில் தவறான பார்சல் அனுப்பியிருப்பது, வங்கி ஏடிஎம் கார்டை புதுப்பிப்பது, போலியான வாடிக்கையாளர் சேவை நம்பருக்கு கால் செய்வது, மலிவு விலையில் பொருள்கள் ஆன்லைனில் விற்பனை, போன்ற எந்தவகையிலான சைபர் கிரைம் குற்றங்களிலும் பணத்தை இழக்க வேண்டாம்.
மேலும், சமூக வலைதளங்களில் கில் அப் போன்று வரும் லிங்க் கிளிக் செய்து யூசர் ஐடி மற்றும் ஓடிபி ஆகியவற்றை பகிர்வது, சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை அனைவரும் பார்க்கும்படி பொதுவாக பகிர்வது போன்ற செயல்களை செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு சைபர் கிரைம் ஆன்லைன் மோசடி மூலம் பணம் இழப்பு ஏற்பட்ட உடனடியாகவோ அல்லது 24 மணிநேரத்திற்குள்ளாகவோ விரைவாக சைபர் க்ரைம் உதவி எண் 1930 என்ற எண்ணிற்கு அல்லது www.cybercrime.gov.in என்ற வெப்சைட்டில் புகார் அளிக்கலாம் என ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 coment rios: