இக்கூட்டத்தில் ஈரோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது,
ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 4ம் தேதியன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையானது, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேசைகள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 84 மேசைகளில் எண்ணப்படவுள்ளது.
எனவே, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாதுகாப்பு இருப்பறையில் இருந்து வாக்கு எண்ணும் அறைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1 முதல் 14 வரை உள்ள அனைத்து மேசைகளிலும் வரிசை எண் குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையானது ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிப்பு பலகையில் முறையாக எழுத்தப்பட வேண்டும். மேலும், வாக்கு எண்ணும் அறைக்குள் தேவையான குடிநீர், இருக்கைகள் மற்றும் தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள், வேட்பாளர் முகவர்களுக்கென தனி வழியினையும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், அரசு அலுவலர்களுக்கென தனி வழியினையும் ஏற்பாடு செய்ய வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கும் எண்ணும் பணியை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன் உட்பட அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: