வியாழன், 30 மே, 2024

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிய கால அவகாசம் நீட்டிப்பு: ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தகவல்

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டபூர்வ குடியுரிமைக்கான சான்றாகும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து இலவச பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு இறப்புப் பதிவுச் சட்டம். 1969 மற்றும் பிறப்பு இறப்பு பதிவு திருத்தச் சட்டம் 2023 வழி வகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்பு சான்றிதழ் ஆகும்.

ஒரு குழந்தையின் பிறப்பு, பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்மந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அளித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப் பின் குழந்தையின் பெயரினை, 15 வருடங்களுக்குள் உரிய கால தாமதக் கட்டணம் ரூ.200/- செலுத்தி பதிவு செய்திட பிறப்பு இறப்பு பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு இறப்புப் பதிவு விதிகள், 2000- ன்படி, 2000-ஆம் ஆண்டு ஜனவரி-1ம் தேதிக்கு முன் பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை பெயர் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த கால அளவு முடிந்த பின்னரும் 5 ஆண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிவரை குழந்தையின் பெயரை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டது.

அவ்வாறான நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் 31.12.2019 உடன் முடிவற்ற நிலையில் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்திட பொது மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அந்நாட்டு குடியுரிமை பெற மற்றும் மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற சிரமம் ஏற்பட்டது.

எனவே பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை கலைந்திட, பிறப்பு பதிவு செய்து 15 ஆண்டு கால அளவு முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் உள்ள அனைத்து பிறப்பு பதிவுகளுக்கும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டு கால அவகாசம் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்டுள்ளது. அக்கால அவகாசம் 2024-ஆம் ஆண்டு டிசம்பர்-31 ல் முடிவடையவுள்ளது.

எனவே ஈரோடு மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின் உரிய ஆவணங்களுடன் (பிறப்பு சான்றிதழ் நகல், பள்ளி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை) ரூ.200 கால தாமத கட்டணம் செலுத்தி ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறான கால அவகாச நீட்டிப்பு இனி வரும் காலங்களில் வழங்கிட இயலாது என இந்திய தலைமை பதிவாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்தி பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: