புதன், 8 மே, 2024

ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2010ம் ஆண்டு சுசி ஈமு பார்மஸ் நிறுவனம் ரூ.1.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ஈமு கோழி வளர்க்க பண்ணை அமைத்தும் மாதம் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையும் இரண்டு வருடத்திற்கு பிறகு முதலீடு செய்த பணம் திருப்பி தரப்படும் என பல கவர்ச்சிக்கரமான விளம்பரங்களை செய்தது.

இதனை நம்பி ஈரோடு,திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பணத்தை முதலீடு செய்தனர். இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு முதலீடு செலுத்தியவர்களுக்கு உரிய தொகை கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உரிமையாளர் குருசாமி என்பவரை கைது செய்து நிறுவனத்தின் அசையும் அசையா சொத்துக்கள் நீதிமன்றம் உத்தரவின் பேரில் முடக்கப்பட்டது.

இதுதொடர்பாக கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் சுசி ஈமு நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் பொது ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, மே 8, 9ம் தேதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் முன்னிலையில் நிறுவனத்தின் பொது ஏலம் இன்றும் நாளையும் ஏலம் விடப்படும் அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற பொது ஏலத்தில் சுசி ஈமு நிறுவனத்தின் ரூ.8 கோடி ரூபாய் மதிப்பிலான இரு இடங்களில் உள்ள 7 ஏக்கர் நிலம் விடப்பட்டது. ஏலத்தில் 10 பேர் பங்கேற்ற நிலையில் நிலத்தின் ஆரம்ப விலை அதிக அளவில் முன்வைத்து ஏலம் விடப்பட்டதால் நிலத்தின் மதிப்பு தொகை அதிகமாக இருப்பதாக கூறி ஏலத்தை யார் எடுக்க முன்வரவில்லை.

இதனால் ஏலத்தில் முன் வைத்த கருத்துக்களை கேட்டு கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் ஏலம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார். இதுவரை ஈமு நிறுவனத்தின் மூலம் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புகார் கொடுத்து இருப்பதாகவும் மோசடியில் ஈடுபட்ட ஈமு நிறுவனத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ள 60 அசையா சொத்துக்களை ஜீன் மாதத்திற்குள் பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: