புதன், 8 மே, 2024

ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் முன்னேற்பாடு, குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக வெப்ப அலை ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜி.பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஈரோடு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் நாள்தோறும் வழங்கப்படும் குடிநீர் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் அளவு மற்றும் இதர பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் சொந்த நீர் ஆதாரங்களின் மூலம் வழங்கப்படும் குடிநீர் அளவு ஆகியவை குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், கல்லூரி பேருந்து நிலையங்கள், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கோடை காலங்களில் பொது மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகத்தை அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து உறுதி செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தமாக, முறையாக பராமரிக்க வேண்டும்.

நாள்தோறும் வழங்கப்படும் குடிநீரின் தரத்தினை சுகாதாரத்துறை அலுவலர்கள் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் முறையாக அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். தற்பொழுது கோடை வெப்பம் அதிகமாக உள்ள காரணத்தினால் பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற முக்கியமான இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும்.

தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அதிகரித்து வரும் வெப்பத்தின் காரணமாக பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை அனைத்து துறை அலுவலர்களும் பின்பற்றி இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது மக்களுக்கு குடிநீர் வைக்க வேண்டும்.

பொதுமக்கள் அமர நாற்காலிகளை ஏற்படுத்த வேண்டும். வயதானவர்கள் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொழுது அவர்களை அலைக்கழிக்காமல் உடனடியாக அவர்களுக்குரிய தீர்வினை ஏற்படுத்த வேண்டும். மேலும் பொது சுகாதார துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளபடி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் முக்கியமான இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்கள் வைக்க வேண்டும். வனத்துறையின் சார்பில் வனப்பகுதிகளில் ஏற்படும் தீ போன்றவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும்,விலங்குகளுக்கு தேவையான குடிநீர் தண்ணீர் தொட்டிகளின் மூலம் வழங்க வேண்டும்..மேலும், பொதுமக்கள் கோடை வெப்ப தாக்க பாதிப்புகளை தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நிமித்தமாக வெளியே வரவேண்டிய கட்டாயம் ஏற்படின் குடையை பயன்படுத்த வேண்டும். வெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பை தடுக்க தண்ணீர், இளநீர், பழச்சாறுகள். ஓஆர்எஸ் சர்க்கரை உப்பு கரைசல் போன்ற திரவங்களை பருகலாம். ஈரோடு மாவட்ட பொதுமக்கள் கோடை வெயிலின் வெப்ப தாக்க பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மணிஷ், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஹம்மது குதுரத்துல்லா (பொது), செல்வராஜ் (வளர்ச்சி) மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வனத்துறை, மின்சார வாரியம், நெடுஞ்சாலைத்துறை உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: