ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணா (வயது 75). இவருக்கு, நேற்று முன்தினம் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், சொர்ணாவால் நடக்க முடியவில்லை. இதையடுத்து, சொர்ணாவை அவரது மகள் வளர்மதி சிகிச்சைக்காக ஆட்டோவில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது, சொர்ணாவுக்கு ஸ்ட்ரெச்சர் வழங்கும்படி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்ட போது, அங்கு இருந்த ஊழியர்கள் அலைக்கழித்துள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் ஸ்ட்ரெச்சர் வராததால் வலியால் துடித்த சொர்ணாவை அவரது மகளே தூக்கி கொண்டு மருத்துவமனை வளாகத்தில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில், அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகா ஆகியோருக்கு விளக்கம் கேட்டு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் மெமோ வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் கூறியதாவது:- ஈரோடு அரசு மருத்துவமனையில் சம்பவத்தன்று கொலை வழக்கு தொடர்பான போராட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மூதாட்டிக்கு உடல் நலம் இல்லாமல் அழைத்து வரப்பட்டார். அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. மூதாட்டியை அவருடன் வந்த மகள் தூக்கிக்கொண்டு சென்று இருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்த மருத்துவப் பணிகள் இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, நாளை (30ம் தேதி) காலை 11.30 மணிக்கு விசாரணை நடத்த உள்ளேன். மருத்துவமனை கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவ அதிகாரி, அப்போது பணியில் இருந்த அனைவரும் விசாரிக்கப்பட உள்ளனர். விசாரணைக்கு பின்னர், உண்மை நிலவரம் தெரியவரும். நோயாளி அலைக்கழிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
0 coment rios: