நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வீட்டை அபகரிக்க முயன்றதாக திமுக பெண் கவுன்சிலர் மீது பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இதில் வீட்டின் பின்பகுதியில் உள்ள 4 வீடுகளை பத்மநாபன் வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை டவுன் பஞ்சாயத்தில் திமுக கவுன்சிலராக உள்ள உடன் பிறந்த சகோதரியான கலைச்செல்வி க்கும் பத்மநாபனுக்கும் வீடு தொடர்பாக குடும்ப பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கலைச்செல்வி, அத்துமீறி பத்மநாபன் வீட்டுக்குள் நுழைந்து அங்கே குடியிருப்பவர்களை காலி செய்ய சொல்லி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் குடியிருப்பவர்கள், பத்மநாபனுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததையடுத்து பத்மநாபன் இது குறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் கலைச்செல்வி மற்றும் அவரது தாயார் உட்பட 15 பேர் மீது அத்துமீறி வீட்டினுள் நுழைந்தது,தகாத வார்த்தையில் திட்டியது உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வீட்டில் நுழைந்து கவுன்சிலர் கலைச்செல்வி உள்பட அவரது ஆதரவாளர்கள் வீட்டில் குடியிருந்தவர்களுக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுன்சிலர் பதவியில் உள்ள பெண் ஒருவரே இது போன்ற மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியினரை முகம் சுழிக்க வைத்துள்ளது
0 coment rios: