ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை அடுத்த ராட்டைசுற்றிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை அமைந்துள்ளது.
கோவிலில் மூலவராக உள்ள ஸ்வர்ண லிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று (மே.31) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கும், ஸ்வர்ண லிங்கத்துக்கும் ஆன்மிக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பாலபிஷேகம் நடந்தது.
இதில், ஈரோடு மாவட்டத்தின் பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வர்ண பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்துக்கும் தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தனர். காலை முதல் நடைபெற்ற பல்வேறு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
0 coment rios: