இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் இ-சேவை மையங்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிப்படுவதைக் கண்டறியப்பட்டாலோ அல்லது புகார்கள் வரப்பெற்று உறுதி செய்யப்பட்டாலோ சம்மந்தப்பட்ட இ-சேவை மையத்தின் அங்கீகாரம் முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்கள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான விலைப்பட்டியல் அட்டை, அரசு அங்கீகாரம் பெற்றமைக்கான பெயர் பலகை, சேவை மையம் தொடர்பாக புகார் தெரிவிக்க ஏதுவாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 மற்றும் 18004256000 முதலியவற்றை பொதுமக்களின் பார்வைக்கு தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து, அருகில் உள்ள வட்டாட்சியர், ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் இ-சேவை மையங்களை அணுகி அரசு நிர்ணயித்த சேவை கட்டணத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறும் மற்றும் சேவைக் கட்டணத்தினை செலுத்த இ-சேவை மையங்களில் இணையவழி பணபரிவர்த்தனை (டிஜிட்டல் பேமெண்ட்) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் பயன்படுத்தி கியூஆர் ஸ்கேன் செய்து சேவைக் கட்டணத்தை இணையவழியில் செலுத்தி பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வருவாய்த்துறை சான்றிதழ்கள் (மனு ஒன்றிக்கு) ரூ.60ம், ஓய்வூதிய திட்டங்கள் ரூ.10ம், இணைய வழி பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் ரூ.60ம், திருமண நிதியுதவி திட்டம் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நிதியுதவி திட்டம் ரூ.120ம், மாற்றுத்திறனாளி தொடர்பான நலத்திட்டங்கள் ரூ.10ம் பொது இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு தமிழ்நாடு ஆளுமை முகமையினால் சேவைக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தவிர அதிக சேவைக் கட்டண வசூல் தொடர்பான புகார்களுக்கு tnesevaihelpdesk@tn.gov.in என்று மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கட்டணமில்லாத தொலைபேசி எண் 1100, 18004256000 மற்றும் 0424-2260211 மூலமாகவோ புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: