இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையானது, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேசைகள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 84 மேசைகளில் 17 முதல் 22 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. மேலும், வாக்கும் எண்ணும் பணிக்கு 84 கண்காணிப்பாளர்கள், 84 உதவியாளர்கள், 84 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் இரு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு, இதில் பிரதான நுழைவு வாயில் வழியாக வேட்பாளர்கள், வேட்பாளர் முகவர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையத்திற்கு வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவோர் ஆகியோர் மிக எளிதாகவும், விரைவாகவும் உள்ளே வர ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே, வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் நாளான வருகின்ற 4ம் தேதி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஈரோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை (இன்று) ஆய்வு மேற்கொண்டார். மேலும், 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான குடிநீர் வசதி, மின்சாரம், கழிப்பிடம், வாகனம் நிறுத்துமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தபால் வாக்கு எண்ணும் அறையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன், செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) கார்த்திகேயன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
0 coment rios: