தமிழ்நாட்டில் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் சுட்டெரித்த வெயிலுக்கு இணையாக, தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. மேலும், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாலும், பரவலாக மழை பெய்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. 96.08 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. பின்னர், மாலை முதல் இரவு வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது.
ஈரோட்டில் நேற்று மாலை 5 மணி அளவில் பலத்த மழை கொட்டத் தொடங்கியது. சுமார் 15 நேரம் பெய்த மழை, பின்னர் தூறலாக தொடர்ந்தது. மாலையில் மழை கொட்டியதால் ஈரோடு மாநகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
இந்த மழை காரணமாக ஈரோடு மாநகரில் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. பள்ளமான இடங்களில் குளம் போல தண்ணீர் தேங்கியது. சாக்கடை கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் நிறைந்து சாலைகளில் வெள்ளம் அதிகமாக ஓடியது. பல பகுதிகளில் சாலைகள் கால்வாய்கள் போல மாறின.
இதேபோல், நேற்று மாலை கோபி, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, கொடுமுடி, டி.என்.பாளையம், பவானி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. அதேபோல கேர்மாளம் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், கேர்மாளத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள அணைக்கரை என்ற இடத்தில் காட்டாற்று வெள்ளம் தரைப்பாலத்தை மூழ்கடித்து சென்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று (ஜூன்.6) வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இன்று (ஜூன்.7) வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை கடந்த 24 மணி நிலவரப்படி பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:-
ஈரோடு - 40.00 மி.மீ,
மொடக்குறிச்சி - 80.00 மி.மீ,
கொடுமுடி - 22.00 மி.மீ,
பெருந்துறை - 5.00 மி.மீ,
சென்னிமலை - 12.00 மி.மீ,
பவானி - 25.80 மி.மீ,
கவுந்தப்பாடி - 45.60 மி.மீ,
அம்மாபேட்டை - 11.00 மி.மீ,
வரட்டுப்பள்ளம் அணை - 13.40 மி.மீ,
கோபிசெட்டிபாளையம் - 12.20 மி.மீ,
எலந்தகுட்டைமேடு - 8.00 மி.மீ,
கொடிவேரி தடுப்பணை - 3.00 மி.மீ,
குண்டேரிப்பள்ளம் - 17.00 மி.மீ,
சத்தியமங்கலம் - 4.00 மி.மீ,
பவானிசாகர் - 2.20 மி.மீ,
தாளவாடி - 7.00 மி.மீ,
மாவட்டத்தில் மொத்தமாக 308.20 மி.மீ ஆகவும், சராசரியாக 18.13 மி.மீ ஆகவும் மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
0 coment rios: