ரமேஷ்குமார், மிஸ்ரா ராம் இருவரும் ஈரோடு மஜீத் வீதியில் உணவு பொருட்களை பேக்கிங் செய்யும் அலுமினிய பாக்ஸ் தயாரிக்கும் கம்பெனியை சொந்தமாக நடத்தி வருகின்றனர். இருவரும் இந்த கம்பெனியின் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த கம்பெனியில் தேவாரம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். தேவராமும் இவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கம்பெனியில் வசூலாகும் பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருப்பது வழக்கம். தினமும் காலை வீட்டை பூட்டி விட்டு செல்லும் இவர்கள் வேலை முடித்துவிட்டு மீண்டும் இரவில் வீட்டுக்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் ரமேஷ் குமார் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றுவிட்டார். வீட்டில் மிஸ்ரா ராம் மற்றும் தேவாரம் இருந்துள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். வீட்டின் பீரோவில் கம்பெனியில் வசூலான ரூ.7.50 லட்சம் பணம் இருந்துள்ளது. பின்னர் இருவரும் வேலை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். பீரோவில் இருந்த ரூ.7.50 லட்சம் பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டவுன் டி.எஸ்.பி. ஜெய்சிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்தவீட்டிற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதேபோல் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
போலீசார் வீட்டை சுற்றி சோதனை செய்த போது வீட்டில் இரும்பு ராடு ஒன்று இருந்தது. இதை வைத்துக் கொள்ளையர்கள் வீட்டுக்குள் வந்தது தெரிய வந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து பணம் திருடியது தெரியவந்துள்ளது. இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
0 coment rios: