தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஈரோடு தொகுதியில் மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் வாக்களித்தனர். அதன்படி, 70.59 சதவீத வாக்குகள் பதிவானது. அந்த வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு அருகே உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
அங்கு வாக்கு எண்ணும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. முடிவுகளும் அன்றைய தினமே அறிவிக்கப்படுகிறது. ஈரோடு தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கயம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதம் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் மொத்தம் 84 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
அதன்படி, நாளை காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதைத்தொடர்ந்து 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது.
மேலும், எண்ணப்பட்ட வாக்குகள் ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிப்பு பலகையில் முறையாக எழுதப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
0 coment rios: