ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் 5 லட்சத்து 62 ஆயிரத்து 339 வாக்குகள் பெற்று, 2 லட்சத்து 36 ஆயிரத்து 566வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த இடம் பெற்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், 3 லட்சத்து 25 ஆயிரத்து 773 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் எம்.கார்மேகன் 82 ஆயிரத்து 796 வாக்குகள் பெற்று மூன்றாமிடமும், தமாகா வேட்பாளர் பி.விஜயகுமார் 77 ஆயிரத்து 911 வாக்குகள் பெற்று நான்காமிடமும் பெற்றனர். நோட்டாவிற்கு 13 ஆயிரத்து 983 வாக்குகள் கிடைத்துள்ளன.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் தனக்கு அடுத்து வந்த அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை விட 12 ஆயிரத்து 786 வாக்குகளை திமுக வேட்பாளர் பிரகாஷ் கூடுதலாகப் பெற்றார். இந்த வாக்கு வித்தியாசம் ஒவ்வொரு சுற்றிலும் அதிகரித்து, 23வது சுற்றில், 2 லட்சத்து 36 ஆயிரத்து 566 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ் வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல், முதல் சுற்றில் தமாகா வேட்பாளர் விஜயகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகனை விட 370வாக்குகள் அதிகம் பெற்று இருந்தார். இரண்டாம் சுற்றில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 626 வாக்குகள் கூடுதலாக பெற்ற நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து அதிக வாக்குகளைப் பெற்று, 4885 வாக்கு வித்தியாசத்தில் நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன் மூன்றாமிடம் பெற்றார்.
இதனையடுத்து, ஈரோடு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஈரோடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரைத் தவிர மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
0 coment rios: