சனி, 22 ஜூன், 2024

ஈரோட்டில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக, துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் புகையிலை, குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் துறைவாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் காவல் துறை, சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு தணிக்கையில் ஈடுபட்டு போதைப் பொருட்கள் பயன்பாட்டினை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளை தனி கவனம் செலுத்தி கூட்டு குழுக்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அரசு விதிகளுக்கு உட்படாமல் சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கவும், கடைகளை சீல் வைக்க வேண்டும். போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்களின் மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகள் தங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் உள்ள கடைகளில் தணிக்கை மற்றும் கூட்டு தணிக்கைகள் மூலமாக புகையிலை, குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்வதை கண்காணித்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பாகவும் போதை பொருட்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள், சாக்லெட்கள் இணையதள வாயிலாக விற்பனை செய்பவர்களை கண்டறிந்து சைபர் கிரைம் மூலமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழாக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 மற்றும் 9442900373 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த புகார் எண்கள் பொதுமக்களுக்கு தெரியும் படி விளம்பரம் பதாகைகள் அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறை, உணவு பாதுகாப்பு, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர் கல்வித்துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, உதவி ஆணையர் (கலால்) ஜீவரேகா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: