செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

கீழ்பவானி வாய்க்காலில் நீர் கசிவு: அமைச்சர், ஆட்சியர் ஆய்வு; 2 நாளில் தற்காலிக தீர்வு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த நல்லாம்பட்டி செந்தாம்பாளையம் குளம், ஒட்டங்காடு பகுதியில் கரையை ஒட்டியுள்ள கீழ்பவானி (எல்பிபி) வாய்க்காலில் நீர் கசிவு ஏற்பட்டு, வாய்க்காலிற்கு கீழ்பகுதியில் செல்லும், மழைநீர் வடிகாலில் தண்ணீரானது வெளியேறி வருகிறது.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த நீர்வளத்துறை அதிகாரிகள், கசிவு ஏற்பட்டுள்ள இடத்தை ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, கீழ்பவானி வாய்க்காலில் அனைத்து இடங்களிலும் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் நன்றாக நடந்துள்ளது. எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது கசிவு ஏற்பட்டுள்ள பகுதி மிக பழமையான பகுதி. சில காரணங்களால் இப்பகுதியை சீரமைக்கும் பணி இந்தாண்டு எடுக்கப்பட முடியவில்லை. அடுத்தாண்டு பணிகள் மேற்கொள்வதற்கான திட்டம் உள்ளது.

இந்தாண்டு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வந்ததால், முழுமையான தண்ணீர் வந்த பிறகு இடையிலே பிரச்சனை ஏற்பட்டால், தண்ணீர் நிறுத்தப்பட்டு பணிகளை முடித்து தான் கொண்டு போகும் சூழ்நிலை ஏற்படும். தற்போது கசிவு ஏற்பட்டுள்ள இடத்தை ஆட்சியர் மற்றும் விவசாயிகளுடன் சேர்ந்து பார்வையிட்டுள்ளோம்.

கசிவு ஏற்பட்டுள்ள இடத்தில் தற்காலிக நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் மீண்டும் தண்ணீரை திறந்து விடும் வகையில் இந்த பணிகள் முடிக்கப்படும் என கருதுகிறோம். இந்த பிரச்சனையை நிரந்தரமாக சரிசெய்ய 15 நாட்கள் ஆகும் என்பதால், தற்போது தற்காலிக பணிகள் நடத்தப்பட்டு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த முறை தண்ணீர் திறக்கும் போது இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாத வகையால் முறையாக திட்டமிட்டு தண்ணீர் திறக்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் மற்ற இடங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் உள்ளது. ஏதேனும் ஏற்பட்டால் அதனை சரிசெய்யப்படும். தற்போது ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் பணிகள் நிறைவு பெற்று தண்ணீர் திறக்கப்படும்.

கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தால், அணையில் தண்ணீர் இருப்பு பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். பேட்டியின் போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் முருகேசன் (கோவை மண்டலம்), கண்காணிப்பு பொறியாளர் கோபி (நீர்வளத்துறை, ஈரோடு), செயற்பொறியாளர் திருமூர்த்தி உட்பட தொடர்புடைய துறை உயர் அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: