ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (21ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார். இந்தத் திட்டத்தின்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, மக்களின் சேவைகள், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வருகிறார்
அந்த வகையில், இன்று (21ம் தேதி) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட மாக்கினாம்கோம்பை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில், கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, மாக்கினாம்கோம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சங்கத்தில் செயல்படும் இ-சேவை மையம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கடன் சங்கத்தில் வழங்கப்படும் வேளாண் கடன் குறித்து கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, இண்டியம்பாளையம் நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, நியாய விலை பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து, நியாய விலைக்கடையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, அரசூர்புதூர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மையத்திற்கு வருகை புரியும் குழந்தைகளின் விபரங்கள் மற்றும் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, உக்கரம் வட்டார அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் இண்டியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரசவ பிரிவு, தடுப்பூசி பிரிவு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாள்தோறும் சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகள் குறித்து கேட்டறிந்து, மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் காலாவதி நாள் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனையடுத்து, சத்தியமங்கலம் அரசினர் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவினை சாப்பிட்டார்.
தொடர்ந்து, சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துறைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து, அலுவலர்களுடன் விவாதித்தார். மேலும், ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சக்திவேல் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: