செவ்வாய், 24 செப்டம்பர், 2024

பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி பேரூராட்சிகளில் ரூ.2.60 கோடியில் புதிய பணிகள்

ஈரோடு மாவட்டம், பெத்தாம்பாளையம் மற்றும் நல்லாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பெத்தாம்பாளையம் பேரூராட்சி, வார்டு எண்.09 பொன்னான்டாவலசு தேவாளிபாறை நெசவாளர்காலனியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் 750 மீ நீளத்திற்கு மண்சாலையினை தார்சாலையாக அமைக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி துவங்கி வைத்தார்.
தொடர்ந்து, அதேப் பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஈரோடு திங்களூர் மெயின்ரோடு கரிச்சிகாடு பிரிவிலிருந்து பொன்னான்டாவலசு மாரியம்மன்கோவில் உள்ள பழுதுபட்ட தார்சாலையினை ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தல் பணியினையும் அவர் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.77.89 லட்சம் மதிப்பீட்டில் காலனி பகுதியில் பழுதுபட்ட தார்சாலை புதுப்பித்தல் பணியினையும், பெத்தாம்பாளையம் பேரூராட்சி வார்டு எண். 13, கருக்கம்பாளையம் புதூர் பகுதியில் ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் பராமரிப்பு பணி மற்றும் முதல் தளத்தில் சமையல் அறை, உணவு உண்ணும் அறை அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்தார்.

மேலும், நல்லாம்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.41.50 லட்சம் மதிப்பீட்டில் வார சந்தையில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இதனையடுத்து, பெத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் செங்கோடம்பாளையம் பகுதியில் 211 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், பகுதிநேர நியாய விலைக்கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

முன்னதாக, பெருந்துறை சாலை, வாய்க்கால்மேடு நந்தா கல்லூரி அருகில் பனை விதை நடும் விழாவினை துவக்கி வைத்து, பனை விதைகளை நட்டு வைத்தார். மேலும், பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் இரண்டாயிரமாவது மரக்கன்று நடும் பணியினை துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேசன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: