ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 56). இவர் அரசு போக்குவரத்துக் கழக அந்தியூர் கிளையில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விஜய், பி.இ. பட்டப்படிப்பு படித்து உள்ளார்.
இந்நிலையில், சாமிக்கண்ணுக்கும், அரசு போக்குவரத்துக் கழக கோபிசெட்டிபாளையம் கிளையில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் சாமியப்பன் (வயது 54) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது, சாமிகண்ணுவிடம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர ராஜா என்பவரை தொலைப்பேசி மூலம் அறிமுகப்படுத்தி, விஜய்க்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடம் கடந்த 2022ம் தேதி ஆண்டு மே மாதம் 30ம் தேதி ரூ.15 லட்சத்தை சாமியப்பன் பெற்றார்.
இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி விஜய்யை டெல்லி அழைத்துச் சென்று மகேந்திரராஜாவை அறிமுகப்படுத்தி வேலை ஆணையை சாமியப்பன் வழங்கியுள்ளார்.
பின்னர், 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி ரூ.14 லட்சத்தை பெற்றுக் கொண்டு, விஜய்யிடம் கொடுத்த ஆணையை சாமியப்பன் மீண்டும் வாங்கிக் கொண்டு, மெயிலில் வேலைக்கான ஆணை வரும் என்று கூறியுள்ளார்.
ஆனால், பல மாதங்கள் ஆகியும் மெயிலில் வேலைக்கான ஆணை வராததால் ஏமாற்றம் அடைந்தததை உணர்ந்த சாமிக்கண்ணு இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் கடந்த 5ம் தேதி புகார் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து ரூ.29 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்த சாமியப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 coment rios: