ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அடுத்த செல்லப்பநாயக்கன்பாளையம், ஈ.பி நகரில் வசித்து வருப்பவர் விவசாயி சுப்பிரமணியம் (வயது 54). இவரது மனைவி அம்சாதேவி (வயது 52). 60 வேலம்பாளையம் நொச்சிக்காட்டுவலசில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று (நவ.4) காலை வழக்கம்போல் சுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி அம்சாதேவி தங்களது பணிக்கு சென்று விட்ட நிலையில், சுப்பிரமணியம் மதியம் 1.30 மணியளவில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மெயின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 17 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து ஈரோடு மொடக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடந்து, ஈரோடு மாநகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் முருகேசன் தலைமையில், மொடக்குறிச்சி காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காலை 11 மணிக்கு மேல் மதியம் 1.30க்குள் பட்டப்பகலில் இக்கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பது தெரியவந்தது. மேலும், இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியதோடு, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
0 coment rios: