சனி, 23 நவம்பர், 2024

உள்ளாட்சி தின கிராம சபைக் கூட்டம்: சத்தியமங்கலம் ராஜன்நகரில் ஈரோடு ஆட்சியர் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ராஜன் நகர் ஊராட்சி கஸ்தூரிபா துவக்கப்பள்ளி வளாகத்தில், உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் இன்று (நவ.23) நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் சந்திராமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இந்த கிராம சபை கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மாகாத்மா தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட கூட்டப்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது,

தற்போது, மழைக்காலம் துவங்கியுள்ளதால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்ப்பதற்கு முக்கியமான ஒன்று நமது வீட்டினை தூய்மையாக வைத்துக்கொள்வது மட்டுமன்றி சுற்றுப்புறத்திைனையும் தூய்மையாக பராமரிப்பதாகும். வீட்டின் முன்புறம், பின்புறம் மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தேவையற்ற நீர்தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

அவ்வாறு சேகரிக்கும் தேவையற்ற பொருட்களை உடனடியாக துப்புரவு பணியாளர்கள் கொண்டு வண்டியில் வைத்து குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். குடிநீர் பாத்திரங்கள் தவிர மற்ற அனைத்து நீர் சேகரித்து வைக்கும் சிமெண்ட் தொட்டி, கீழ்நிலை தொட்டி, மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் பானைகள் போன்றவற்றில் கொசுப்புழு கண்டறியப்பட்டால், நீரினை முழுவதுமாக கொட்டி, பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து கழுவி, 24 மணிநேரம் கழித்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

நீர் சேகரித்து வைக்கும் அனைத்து பாத்திரங்களிலும், கொசு புகாதவண்ணம், நன்கு மூடிவைக்க வேண்டும். மேலும், காய்ச்சல் அறிகுறி ஏதேனும் ஏற்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும், ராஜன் நகர் ஊராட்சி கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்மாதிரி ஊராட்சியாக சிறந்து செயல்பட வேண்டும்.

அதற்கு அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதுடன் அவர்களின் பணிக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பினை வழங்குவதுடன் ஊராட்சியின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் ஊராட்சியின் வளர்ச்சிக்கு முழு பங்காற்றிட வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர், ராஜன் நகர் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை காவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சால்வை மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) பழனிவேல், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) மரகதமணி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பிரியா, ராஜன்நகர் ஊராட்சி துணைத்தலைவர் விஜயலட்சுமி, சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல், சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் வகாப், ராதாமணி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: