கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் கூடுதல் வருவாய் கால்நடைகளை நம்பியே உள்ளது. கால்நடை வளர்ப்பில், கோமாரி நோய் என்பது விவசாயிகளுக்கு, பெரும் சவாலாக உள்ளது. பொதுவாக, பசு மற்றும் எருமைகளை கால் மற்றும் வாய் நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.
இந்நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத்திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் உயரும். அதனால் கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் இருக்க, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் (பசுவினம் மற்றும் எருமையினம்) 100% தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி 2024-25ஆம் ஆண்டில் டிச.16ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜன.20ம் தேதி வரை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்கள், வருவாய் கிராமங்கள். பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி ஆகியவற்றில் ஆறாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி 111 குழுக்கள் அமைத்து 3,08,500 கால்நடைகளுக்கு தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக, ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின், கால்நடை நோய் புலனாய்வு பிரிவில் உள்ள குளிரூட்டப்பட்ட அறையில் 3,08,500 டோஸ் தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் இத்தடுப்பூசி முகாம்களை பயன்படுத்தி கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டு கோமாரி நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
0 coment rios: