வியாழன், 30 ஜனவரி, 2025

ஈரோடு மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 59,772 பேர் பயன்: ஒருங்கிணைப்பாளர் தகவல்

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு பெரிதும் உதவி வருகிறது. இதற்காக ஈரோடு மாவட்டத்தில் 43 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. பொதுமக்கள் விபத்தில் சிக்கினாலோ அல்லது ஆபத்தான நிலையில் இருந்தாலோ அழைப்பு வந்த உடன் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு சென்று முதலுதவி மற்றும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருவது என்று சேவை செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவின் கூறியதாவது:-

108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 59 ஆயிரத்து 772 பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் பிரசவ சேவையில் மட்டும் 14 ஆயிரத்து 258 கர்ப்பிணிகள் பயன் அடைந்துள்ளனர். சாலை விபத்துகளில் 15 ஆயிரத்து 728 பேர் பயன் அடைந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகள் 562 பேர் பயன் அடைந்துள்ளனர்.

மேலும், இருதயநோய் தொடர்பாக 3,187 பேர், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டோர் 1,693 பேர், விஷ பாதிப்பு காரணமாக 2,060 பேர், சர்க்கரை நோய் பாதிப்பு காரணமாக 1,436 பேர் மற்றும் இதர மருத்துவ சேவைகளுக்காக 20 ஆயிரத்து 848 பேரும், 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டை காட்டிலும் 2024ம் ஆண்டில் 502 பேர் அவசரகால சேவை மூலம் பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: