வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகளாக நடைபெறும்; மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 8ம் தேதி) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்ரவரி 7ம் தேதி) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, அவர் தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 5ம் தேதி 237 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சித்தோடு, ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நாளை (பிப்ரவரி 8ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வாக்குப்பதிவான தபால் வாக்குகள் வைக்கப்பட்டுள்ள இருப்பறை காலை 7.30 மணிக்கும், வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறை காலை 7.35 மணிக்கும் தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்படும். தொடர்ந்து காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளும் எண்ணப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 199 நபர்கள் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள், 4 சேவை வாக்காளர்கள், 1 வாக்காளரும் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 14 மேசைகளில் வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளது. 14 மேசைகளுக்கும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல தபால் வாக்குகள் எண்ணிக்கை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் மேசையில் நடைபெறும். ஒவ்வொரு மேசைக்கும் தலா ஒரு வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார்வையாளர் என 20 சதவீதம் ரிசர்வ் சேர்த்து 51 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கடந்த பிப்ரவரி 4ம் தேதி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேற்படி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு இரண்டு முறை பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (பிப்ரவரி 7ம் தேதி) ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மூன்றாம் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை 17 சுற்றுகளில் எண்ணப்படவுள்ளது. தபால் வாக்குகள் மற்றும் சேவை வாக்குகளுக்கு தலா ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்கு எண்ணும் மையத்தில் 76 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 600 காவலர்களும், 3 மத்திய ஆயுதப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள சீல் மேசையில் அகற்றப்பட்டு எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தகவல்களை தெரிவிப்பதற்கு அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள் /வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு என தனித்தனி அறை அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: