இதையொட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. பொதுமக்கள் தாங்கள் கொண்டுவரும் மனுக்களை இது வரை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்த பெட்டியில் போட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் ஒவ்வொரு வாரமும் பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவித்திருந்தார்.
அதன்படி, இன்று (பிப்.17) ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், சாலை, குடிநீர் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 410 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் சார்பில் இப்கோ டோக்கியோ காப்பீட்டு நிறுவனம் மூலம் பயிர்கடன் பெறும் உறுப்பினர்களுக்கு தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னியங்கிரிவலசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் காப்பீட்டு தொகை செலுத்தியிருந்த உறுப்பினர் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது மனைவிக்கு ரூ.3 லட்சம் தனிநபர் விபத்து காப்பீட்டுத் தொகையினை வழங்கினார்.
மேலும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் நியாயவிலைக்கடைப் பணியாளர்களான 2 விற்பனையாளர்கள் மற்றும் ஒரு எடையாளர் ஆகியோருக்கு மாவட்ட அளவிலான சிறந்த நியாய விலைக்கடைப் பணியாளர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் பரிசுத்தொகையினை வழங்கி கௌரவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியரக (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், துணை ஆட்சியர் (பயிற்சி)சிவபிரகாசம், ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் காலிதா பானு உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 coment rios: