கராத்தே சங்கங்களுக்கிடையே உள்ளபிரச்சனைகளை தீர்க்க மத்திய அமைச்சர் உறுதி என கராத்தே தியாகராஜன் பேட்டி..!
தென்னிந்திய அளவிலான இரண்டு நாள் கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோடு திண்டல் வேள்ளாளர் சிபிஎஸ்சி பள்ளியில் நடந்தது. அகில இந்திய மரபு கராத்தே விளையாட்டு சங்க இணை செயலாளர் மற்றும் தேசிய நடுவர் ஏ.சக்திவேல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தார்.
இன்று நடந்த நிறைவு விழாவில், அகில இந்திய பொது செயலானர் முத்துராஜ்,
தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடியல் சேகர், நிர்வாகிகள் எஸ்.டி சந்திரசேகர், யுவராஜா, மாவட்ட தலைவர் விஜயகுமார், ஆறுமுகம், ரமேஷ், கராத்தே மாணிக்கம், கரேத்தே சந்திர சேகர், கோவிந்தன், மணி, கீர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அகில இந்திய கராத்தே முதன்மை ஆலோசகர் கராத்தே தியாகராஜன், ஸ்போர்ட்ஸ் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்தப் போட்டிகளில் 2000க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த கராத்தே பயிற்சி மாணவ மாணவிகள் பங்கேற்றனர், இவர்கள் அனைவருக்கும் சுழற்கோப்பை, சைக்கிள்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கராத்தே தியாகராஜன், கராத்தே சங்கங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால் மும்பை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது அதனால் எந்த சங்கங்களுக்கும் அங்கீகாரம் இல்லை, இப்பிரச்சினை தீர்க்க மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மாண்டெக் சிங் மால்வியா அவர்கள் அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசி சுமுகத்தேர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
பல்வேறு கரேத்தே சங்கங்களை சேர்ந்தவர்கள் வழக்குகள் கொடுத்ததன் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்கம் எந்த சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கவில்லை. வழக்கு நிலுவையில் உள்ளதால், பன்னாட்டு போட்டிகளில் கராத்தே கலந்து கொள்ள முடியவில்லை, ஆனால் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த வழக்குகளை சமரசம் ஏற்படுத்தி மீண்டும் கராத்தே சங்கங்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் பெற வேண்டும். இது சம்பந்தமாக நான் முறையிட்டதால் மத்திய அமைச்சர் இப்பிரச்சனையில் மற்ற சங்கங்களை அழைத்து பேசி சம்மேளனம் ஏற்படுத்த உறுதி அளித்துள்ளார்.
கராத்தே சம்மேளனம் முதலில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் தலைமையகம் மும்பைக்கு சென்றது, அதன் தலைவராக நான் இருந்துள்ளேன். அப்போது கராத்தே சிறப்பாக நடைபெற்றது. பொது மக்களிடையே கிரிக்கெட்க்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
கராத்தே, இந்திய ஒலிம்பிக் சங்கம் சம்மேளனத்தை அங்கீகரித்தால் மட்டுமே மாநில அரசு ஒரு சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கும், ஏற்கனவே கராத்தே ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் கரேத்தே போட்டிகள் இடம் பெற்றன. பொதுவாக ஒலிம்பிக்கில் 100க்கும் மேற்பட்ட விளையாட்டுக்கள் உள்ளன. அதில் 28 விளையாட்டுக்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும்.
அதன்படி வரும் ஒலிம்பிக்கில் கராத்தே இடம் பெற வாய்ப்பு இல்லை. கராத்தே போட்டியில் பல்வேறு ஸ்டைல்கள் உள்ளன. அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரு பொதுப்படையான விதிகள் உருவாக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம் போட்டிக்கான சில விதிமுறைகளை வகுத்துள்ளது. மாநில அரசு அதே போன்று சில விதிமுறைகளை வகுக்க வேண்டும். தற்பொழுது அரசின் ஆதரவுடன் கல்வித்துறை தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கராத்தே பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அளிக்கிறது. அதை மேலும் விரிவாக்கம் செய்து பயிற்சி அளிப்பதற்கு உரிய நடவடிக்கையை கல்வித்துறைதான் மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் பெண்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்யலாம். அங்கீகரிக்கப்படாத சரியான பயிற்சி இல்லாத பல சங்கங்கள் போட்டிகளை நடத்துகின்றன என்று புகார் கூறப்படுகிறது. இது குறித்தும் தமிழக அரசுதான் நடவடிக்கை எடுத்து இந்த விளையாட்டை ஒழுங்கு படுத்த வேண்டும் என கூறினார்.
0 coment rios: