அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.19) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், எண்ணமங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 1 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.2 லட்சம் மானியத்தில் நிரந்தர கல்பந்தல் அமைத்து விவசாயம் செய்து வரும் ஜயப்பிரதாப் என்பவரின் காய்கறி தோட்டத்தினையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், 1 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.2 லட்சம் மானியத்தில சிப்பம் கட்டும் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 1 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.95 ஆயிரம் மானியத்தில சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு, விவசாயிகளுடன் திட்டம் குறித்து கேட்டறிந்தார். இயற்கை முறையில் விவசாயம் செய்து வருவதாகவும், மேலும் வாரத்திற்கு சுமார் 1.50 டன் அளவில் காய்கறிகள் ஏற்றுமதி செய்து வருவதாவும் விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, எண்ணமங்கலம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் 40.4 மீட்டர் நீளத்திற்கு எண்ணமங்கலம்- செலம்பூரம்மன்கோயில் வரை இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருவதையும், செங்காடு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் 5 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களின் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார். மேலும் நடப்பு கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து, சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, புற நோயாளிகள் பிரிவு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும், கீழ்வாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் சேமிப்பு கிடங்கு மற்றும் மூங்கில்பட்டி நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கணேசன், அந்தியூர் வருவாய் வட்டாட்சியர் கவியரசு மற்றும் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், அமுதா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: