அதன் தொடா்ச்சியாக, 2வது நாளான இன்று (பிப்.20), அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், பச்சாம்பாளையம் ஊராட்சி அண்ணாமடுவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தினசரி வரப்பெறும் பால் கொள்ளளவு, சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஈவுத் தொகை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அதே பகுதியில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரிவிகித அளவில் கலந்துள்ளதா என கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் வழங்கப்படும் உணவின் வகைகள் குறித்து மாணவ, மாணவியர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், அந்தியூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு விடுதியில் உள்ள சமையலறை, மாணவர்கள் கழிவறை, மாணவர்கள் பயிலும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: