வியாழன், 20 பிப்ரவரி, 2025

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சென்னை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான டி.என்.வெங்கடேஷ் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பெஜ்ஜில்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.46.87 லட்சம் மதிப்பீட்டில் பர்கூர் துணை சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பெஜ்ஜில்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் சமையல் கூடம், உணவின் தரம், காலை உணவிற்கான சமையல் பொருட்களின் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்து மாணவர்களுக்கு உணவினை தரமானதாகவும், உரிய நேரத்தில் வழங்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாணவர்களின் கல்வி தரம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் வருகை, எடை, உயரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, பர்கூர் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.49.74 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருவதையும், செல்லம்பாளையம் பர்கூர் கொள்ளேகால் சாலையில் ரூ.70 லட்சம் மற்றும் அதே பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 தடுப்புச்சுவர்களையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துகள் இருப்பு, பணியாளர்களின் வருகை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சுகாதார நிலையத்திற்கு வருகை புரிந்த பொதுமக்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, எண்ணமங்கலம் ஊராட்சி செங்காடு பகுதியில் தானியங்கி நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வது குறித்தும், அதே பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், ஆதிரெட்டியூர் முதல் எண்ணமங்கலம் வரை 2.7 கி.மீ தூரத்திற்கு ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி நடைபெற்று வருதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, கெட்டிசமுத்திரம் ஊராட்சி, புதுராசாங்குளம் குக்கிராமத்தில் மத்திய அரசின் மாநில அரசிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் கட்டப்பட்டுள்ளதையும், அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்புறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் 2 தளங்களுடன் வரவேற்பறை, பிரசவ அறை, புறநோயாளிகள் பிரிவு, பாலூட்டும் தாய்மார்கள் அறை, அறுவை சிகிச்சை அரங்கு, கழிப்பறை, பல் சிகிச்சை பிரிவு, காத்திருப்பு அறை, பெண்களுக்கு ஊசி செலுத்துமிடம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அந்தியூர் அத்தாணி தவுட்டுப்பாளையம் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறுபாலம் மற்றும் 76 மீட்டர் நீளத்தில் வடிகால் அமைக்கும் பணியினையும், அந்தியூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.23.97 கோடி மதிப்பீட்டில் 6,850 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியினை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வரின் மருந்தகம் அமைக்கப்பட உள்ள நிலையில், நசியனூர் பகுதியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் முதல்வரின் மருந்தகம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், பவானி உட்கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ரமேஷ் கண்ணா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், அமுதா, உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: