ஈரோடு மத்திய மாவட்ட திமுக செயலாளராக தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்றுவரும் திமுக, 2026ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றிபெறும் வகையில், கட்சியிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நிர்வாக வசதிக்காகவும், சட்டமன்ற தேர்தல் பணிக்காகவும் சிலமாற்றங்களை திமுக தலைமை செய்துள்ளது. அதன்படி, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் முத்துசாமியிடம் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. இதில் அவரிடம் இருந்து பெருந்துறை தொகுதியை பெற்று ஈரோடு மத்தியம் தொகுதி புதிதாக உதயமாகி உள்ளது.
அதேபோன்று, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் வசமிருந்த பவானி தொகுதியும் இந்த மத்திய மாவட்டத்தில் ஐக்கியமாகி உள்ளது. ஈரோடு மத்திய மாவட்ட செயலாளராக அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மேற்கு மாவட்டங்களை குறி வைத்து அவருக்கு திமுக தலைமை முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
0 coment rios: