ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஜல்லியூரை சேர்ந்தவர் பிரதீப் (வயது 33). இவர் சத்தியமங்கலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள டாஸ்மாக் பாரில் நேற்று முன்தினம் இரவு மது குடித்து கொண்டிருந்தார்.
அப்போது, அவரது பக்கத்தில் அமர்ந்து மது குடித்த ஒருவருக்கும், பாரில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த பிரதீப் ஏன் தகராறு செய்கிறீர்கள்? என தட்டி கேட்டுள்ளார்.
உடனே, பாரில் வேலை செய்யும் பணியாளர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்த கட்டை மற்றும் மூங்கில், துடைப்பத்தால் பிரதீப்பை கடுமையாக தாக்கியுள்ளார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனை பிரதீப்புடன் வந்திருந்த விண்ணப்பள்ளியை சேர்ந்த சண்முகசுந்தரம் (39), வசந்தகுமார் (27) ஆகிய 2 பேரும் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர்களையும் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளியும் தாக்கியுள்ளனர். இதில் அவர்களும் காயம் அடைந்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரதீப், சண்முகசுந்தரம், வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் டாஸ்மாக் பார் பணியாளர்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அருண் (29), வசந்த் (30), அலெக்ஸ் (31), பவித்திரன் (32) ஆகிய 4 பேர் தாக்கியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
0 coment rios: