ஈரோடு லக்காபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜூபைர் அகமது.. இவர் , காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பனை செய்யும் தரகராகவும் மற்றும் கறி கடையும் நடத்தி வருகிறார். இன்று காலை ஈரோடு பேருந்து நிலையம் அருகே மூலப்பட்டறையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவர் இருந்தபோது, இரண்டு கார்களில் வந்த மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, தாய் மற்றும் உறவினர்கள், இது தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர்.கடத்திச் செல்லப்பட்ட ஜூபையரை உடனடியாக மீட்க கோரி உறவினர்கள் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதற்கிடையே மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்பட்டு அவரை கண்டறியும் பணியும் முடுக்கி விடப்பட்டது. இதற்கிடையே, கடத்தல் புகாரில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஜூபைர், ராமநாதபுரத்தை சேர்ந்த ஜமாத் நிர்வாகிகளிடம் பணம் பெற்று மோசடி செய்த்தாகவும், அவரை தேடி வந்தவர்கள் ஜூபைரை அழைத்து கொண்டு கருங்கல்பாளையம் காவல் நிலையம் சென்றது தெரியவந்தது. ஆனால், அதற்குள் ஜூபைர் கடத்தப்பட்டதாக எஸ்.பி அலுவலகத்தில் அழுது புரண்டு ஆர்பாட்டம் செய்த உறவினர்களை போலீசார் அங்கிருந்து கருங்கல்பாளையம் காவல் நிலையம் அனுப்பி வைத்தனர்.
கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட ஜூபைர் மற்றும் ஜமாத் நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருப்பூர் என பல்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்களில் ஜமாத் நிர்வாகிகளிடம் அறிமுகமாகி, போலியான தகவல்களை அளித்து உடல்நலம் பாதித்தவர்களுக்கு உதவுமாறு லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பதும், கண்டெய்னரில் வரும் பழைய இருப்புகளை வாங்கும் தொழில் செய்வதாகவும், தனக்கு பணம் கொடுத்தால் கூடுதலான லாபம் தருவதாகவும் கூறி ஜூபைர் கோடிக்கணக்கில் பலரிடம் பணம் பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவித்தனர். இது்தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வக்பு சட்ட திருத்தம் தொடர்பான போராட்ட காட்சியை, சமூக வலை தளத்தில் ஜூபைர் பதிவு செய்திருந்தார். அதன் மூலம் அவர் ஒரு ஈரோட்டில் இருப்பதை அறிந்து ராமநாதபுரத்தில் இருந்து வந்தவர்கள் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
0 coment rios: