ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் கிராமத்தில் கடந்த மாதம் 27ம் தேதி சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் கோபி மதுவிலக்கு போலீசார் நரிப்பள்ளம் பகுதிக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். இதில், சாராயம் காய்ச்சியதாக அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருடைய மகன் ரவியை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு 20 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா நேற்று அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? எனவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா கூறுகையில், சாராயம், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீதும், அதே போல் லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்' என்றார்.
அப்போது அவருடன் கோபி மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம், பவானி காவல் துணை கண்காணிப்பாளர் ரத்தினகுமார், காவல் ஆய்வாளர்கள் ரவி, முருகையன், கோமதி ஆகியோர் உடன் இருந்தனர்.
0 coment rios: