ஈரோட்டில் சார்பில் தற்சார்பு பாரதம் குறித்த கருத்தரங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழக பாஜக சார்பில் தற்சார்பு பாரதம்என்ற தலைப்பின் கீழ் மாநில அளவிலான கருத்தரங்கம் ஈரோடு ஆலயமணி மஹாலில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர், முன்னாள் ஆந்திர மாநில பாஜக தலைவர் மற்றும் முன்னாள் ஆந்திர முதல்வர் என்டி ராமராவ் மகள் புரந்தேஸ்வரி சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்றார்,
தொடர்ந்து கூட்டத்தில் பேசிய பூரந்தேஸ்வரி...
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நமது நாட்டின் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆவதை தடுக்க 50 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளார். இது நமது பொருளாதாரத்தை பாதிக்கும் என்று நான் கூற விரும்பவில்லை, முன்பு கூட உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டபோது பாரதம் அதை வெற்றிகரமாக சந்தித்தது. அதே நிலைதான் தற்பொழுதும் உள்ளது.
எனினும் இந்த நிலைமையை எதிர்கொள்ள நமது பாரத பிரதமர் தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்தி உள்ளார். இதற்காக வரும் செப்டம்பர் 15 முதல் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25 வரை தற்சார்பு பொருளாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் படி அவர் பணித்துள்ளார்.
அதற்காகத்தான் இந்த மாநில அளவிலான கருத்தரங்கம் அனைத்து மாநிலங்களிலும் தற்போது நடந்து வருகிறது. இதன் முக்கிய நோக்கம் நமது நாட்டு மக்களுக்கு வேண்டிய பொருட்களை நாமே உற்பத்தி செய்து சுய சார்பு நிலையை நாம் அடைய வேண்டும் என்பதாகும்.
இதற்காகத்தான் மேக் இன் இந்தியா திட்டத்தையும் அவர் துவக்கினார். உதாரணத்துக்கு கூற வேண்டுமானால் பெப்சி கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை முற்றிலும் நாம் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நமது நாட்டிலேயே உருவாக்கப்படும் நுங்கு மற்றும் பழச்சாறை நமது வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு அளிக்கலாம்.
இதேபோன்றுதான் இறக்குமதியாகும் பொருட்களுக்கு மாற்றாக நாம் நமது தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நமது உள்நாட்டு பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் நமது நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும்.
தற்சார்பு பொருளாதார நிலை ஏற்படும். இதை வலியுறுத்தவே இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. மாநில அளவிலான நிர்வாகிகள் பலரும் இங்கு வந்துள்ளனர். அவர்கள் இந்த பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்த பிரச்சாரத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக நாட்டில் திகழ வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சிகே சரஸ்வதி, தேசிய செயற்குழு உறுப்பினர் எம்.பி பழனிச்சாமி, மாவட்ட தலைவர் எஸ்.எம் செந்தில், மாவட்ட பொருளாளர் சுதர்சன், மாவட்ட பொதுச்செயலாளர் சிவசங்கரன், புனிதம் ஐயப்பன், ராயல் சரவணன் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவின் மாநில இணை அமைப்பாளர் அக்னி ராஜேஷ், பி என் ஆர் நடராஜ், உட்பட பலர் பங்கேற்றனர்.

0 coment rios: