சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சூர வதம் செய்த எம்பெருமான் முருகப்பெருமானுக்கு வள்ளி தெய்வானை சமேதருடன் திருக்கல்யாண உற்சவம். சேலம் ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமத்தில் நடந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
சஷ்டி விழா முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட உலகம் முழுவதும் உள்ள அத்தனை முருகன் ஆலயங்களிலும் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் பிரசித்தி பெற்ற சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலிலும் கந்த சஷ்டி விழா தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், அசுரனை வென்று சூரவதத்தில் வெற்றிகொண்ட ஆறுமுகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றன.
அதிகாலை முதல் உற்சவமூர்த்தியான ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு பல்வேறு விதமான அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு ராஜா அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து ஆசிரமத்தில் நிறுவனர் சிவனடியார் பாபு தலைமையில், திருக்கோவில் வளாகத்தில் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு கலச பூஜையும் தொடர்ந்து யாக பூஜையும், வேத மந்திரங்கள் முழங்க திருக்கயிலாய வாத்தியம் இசைக்க பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்யதை காண்பித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பின்னர் மாலை மாற்று நிகழ்ச்சியும், நலங்கு வைபவமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஹோமங்கள் செய்யப்பட்டன. இந்த கண்கொள்ளா காட்சியை காண பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து கந்த பெருமானின் கோஷங்கள் முழங்கி வணக்கி மகிழ்தனர். இறுதியாக வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பழனி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு திருமண கோலத்தில் மஹா தீப ஆராதனைகளும் நடைபெற்றன.
மணமக்களுக்கு மொய் எழுதும் நிகழ்வு நடைபெற்றதை அடுத்து திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் ஆசிரமத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. சஷ்டி விழா திருக்கல்யாணம் உற்சவ நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் தேவகி சுதன் வசியா மற்றும் சுப்பிரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

0 coment rios: