வெள்ளி, 21 நவம்பர், 2025

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு அவசர ஆலோசனை..

ஈரோடு : 

*தமிழ்நாடு விசைத்தறி சங்கங்கள் கூட்டமைப்பு அவசர ஆலோசனை: மத்திய அரசின் ரயான் இறக்குமதி விதிகள் ரத்து குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல் வெளியீடு - உற்பத்தி அதிகரிப்புக்கு சாத்தியமில்லை என தீர்மானம்..!*

**************************

ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

சமீபத்தில் மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரயான் பஞ்சுக்கு (Rayon Staple Fibre - RSF) மட்டும் தரக் கட்டுப்பாட்டு ஆணை (Quality Control Order - QCO) நடைமுறையில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், தமிழ்நாடு நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த விலக்கு சலுகை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நூலுக்கும் QCO நடைமுறை இருந்ததாகவும், ஏற்றுமதி செய்யப்படும் ரயான் துணிகளுக்கும் QCO நடைமுறை இருந்ததாகவும், அவை ரத்து செய்யப்பட்டதால், ஈரோடு, சித்தோடு, லக்காபுரம், மாணிக்கம்பாளையம் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் 15 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தியானது 25 லட்சம் மீட்டராக உயரும் என்றும், இதனால் விசைத்தறியாளர்கள் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விசைத்தறி சங்கங்களின் நிர்வாகிகள், தமிழ்நாடு நெசவாளர்கள் கூட்டமைப்பின் இந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானதும், தவறானதும் எனக் கூறி வன்மையாகக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினர். அறிக்கையில் தெரிவித்தது போன்று, உற்பத்தி இலக்கு அதிகரிக்க எவ்வித சாத்தியக்கூறும் இல்லை என்றும், தீபாவளிக்குப் பிறகு விசைத்தறிக் கூடங்களில் ஆள் பற்றாக்குறை காரணமாக விசைத்தறிகளை இயக்க முடியாமல் விசைத்தறியாளர்கள் தவித்து வரும் நிலையில், நூல் விலை குறையும், அதிக ஆர்டர்கள் வரும் என்று தவறான தகவலைத் தெரிவித்திருப்பதும், விசைத்தறியாளர்கள் பலவித இன்னல்களை சந்தித்து வரும் நிலையில் மகிழ்ச்சி என்றும் அறிக்கையில் தெரிவித்தது, கண்டிக்கத்தக்கது என்றும் அதன் முக்கிய அம்சங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், 

ஈரோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் தலைவரும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில  தலைவருமான எல்.கே.எம். சுரேஷ், சித்தோடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக தலைவர் ராக்கி அண்ணன், வீரப்பன் சத்திரம் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக செயலாளர் அசோகன்,
 லக்காபுரம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக நிர்வாகி செந்தில்குமார், மற்றும் அனைத்து சங்கங்களின் சார்பாக செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: