திங்கள், 26 ஜனவரி, 2026

சேலம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அவமதித்த அதிகாரிகள். இந்திய திருநாட்டை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்களை ஒன்று திரட்டி ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை...

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அவமதித்த அதிகாரிகள். இந்திய திருநாட்டை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்களை ஒன்று திரட்டி ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை...

இந்திய திருநாட்டில் 77 வது குடியரசு தினம் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. மேலும் குடியரசு தினத்தில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு  பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் அயோத்தியா பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி கிராமத்தில் ஏரிக்காடு சன்னியாசி முனியப்பன் கோவிலில் குடியரசு தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தழகன் மற்றும் அயோத்தியபட்டினம் பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் ஆரோக்கியநாதன் கென்னடி ஆகியோரின் முன்னிலையில் இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று துண்டு பிரசுரங்களும்  ஏற்கனவே அச்சிடப்பட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டு இருந்தது.
11 மணிக்கு தொடங்க வேண்டிய குடியரசு தின கிராம சபை கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் ஆகியும் தொடங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம் காரணம். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளான முத்தழகன் மற்றும் ஆரோக்கியநாதன் கென்னடி ஆகியோர் இந்திய குடியரசு தினத்தை அவமதிக்கும் வகையில் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காததால் இந்த நிலை. பாதுகாப்பிற்கு காவல்துறை அதிகாரிகளும் வந்துவிட்டனர், குறைகளை கூற துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பங்கேற்று இருந்தனர். ஆனால் கிராம சபை கூட்டத்தை முன்னின்று நடத்த வேண்டிய அரசு துறை அதிகாரிகள் வராமல் இந்திய தேசத்தை அவமதித்தனர் இதனால் இந்த கிராம சபை கூட்டம் தொடங்கு கால தாமதம். கிரிக்கெட் மைதானம் தயார், பந்துவீச்சாளர்  தயார் ஆனால் மட்டை பிடிப்பவர்   எங்கே என்ற நிலை இன்று நடைபெற்ற குடியரசு தின  பள்ளிப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் நிலவியது. நிலைமை இப்படி இருக்க சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருவேப்பிலையைபோன்று, வேண்டுமென்றால் பயன்படுத்தலாம் வேண்டாம் என்றால் தூக்கி எறியலாம் என்று கணக்கில் பள்ளிப்பட்டி மற்றும் மேட்டுப்பட்டி தாதனுரை சேர்ந்த ஒரே ஊராட்சி செயலர் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு பெயரளவில் முக்கிய கோப்புகள் இல்லாமல் கூட்டம் தொடங்கியது. அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ராம்ஜி தர்மன் மற்றும் சித்தரசன் உள்ளிட்டோர் மற்றும்  பஞ்சாயத்து  பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரி திணறியதையும் பார்க்க முடிந்தது. பிறகு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியாமல் எந்த விதமான தீர்மானங்களும் நிறைவேற்றாமல்,  தொடங்கிய சில மணித்துளிகளில் கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றது என்பது வருத்தமளிப்பதாக உள்ளது என கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் ஏற்கனவே இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவரின் கீழ் செயல்பட்ட அதிகாரிகளின் பேரில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல் புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருப்பதாகவும் மேலும் பல்வேறு ஊழல்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய திருநாட்டின் முக்கிய நாள் என்று கூட கருதாமல் சம்பந்தப்பட்ட அதாவது முத்தழகன் மற்றும் ஆரோக்கியநாதன் கென்னடி ஆகிய  அதிகாரிகள் இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தை அவமதித்தது வேதனைக்குரியதாக உள்ளது என்றும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பொதுமக்கள் கலந்து கொண்டதால் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நாளில் அறிவித்து உரிய அதிகாரிகள் பங்கேற்று திரளான மக்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  இன்று நடந்த இந்த சம்பவத்தை கண்டித்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி தவறும் பட்சத்தில் பொது மக்களின் ஒத்துழைப்போடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வேறு ஒரு நாளில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தை  கூட்டத்தை நடத்த வலியுறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் சரி பள்ளிப்பட்டி பஞ்சாயத்து அதிகாரிகளும் சரி அடிமட்ட ஊழியர்களை மிரட்டி அடிபணிய வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: