சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மனைவியின் தவறான சகவாசத்தால் கொலை மிரட்டலுக்கு அஞ்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர். சேலம் வேடுகத்தாம்பட்டியில் நான்கு குழந்தைகள் அனாதையான சோகம்.. கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேலம் காவல் ஆணையரிடம் புகார் மனு.
சேலத்தை அடுத்துள்ள வேடுகத்தாம்பட்டி சங்கோதி வட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநகர் மாவட்ட அமைப்பாளர் செந்தில் உள்ளிட்டவர்களுடன் புகார் மனு கொடுப்பதற்காக சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பழனிச்சாமி மற்றும் செந்தில் உள்ளிட்டோர் வழங்கிய புகார் மனுவில் பழனிச்சாமி எனும் நானும் எனது குடும்பத்தாரும் சங்கோதி வட்டம் பகுதியில் வசித்து வருகிறோம். எனது தம்பி தனபால் அவரது மனைவி பிரியா ஆகியோர் அவர்களது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் எனது தம்பி மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனியாக அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர்.
இந்த விஷயம் எனது தம்பிக்கு தெரிய வரவே, இதுகுறித்து சுபாஷிடம் கேட்டபோது சுபாஷும் அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து எனது தம்பியையும் அவர்களது நான்கு குழந்தைகளையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து அனுப்பிவிட்டனர். இதில் மன உளைச்சலில் இருந்த தனபால் மற்றும் மனைவி பிரியா ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் எனது தம்பி மனைவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், எனது தம்பி தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது சேலம் கொண்டலாம்பட்டி காவல் துறையினரிடம் மரண வாக்குமூலமாக இந்த சம்பவத்திற்கு சுபாஷ் அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது மகன் 3 பேரும் தான் காரணம் என மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதற்கு உண்டான வீடியோவையும் காவல்துறையினர் பதிவும் செய்து உள்ளனர். அதன் பின் சிகிச்சை பலனின்றி எனது தம்பி தனபால் இறந்துவிட்டார். இந்த இருவரும் இறந்ததற்கு காரணமான சுபாஷ் மற்றும் குடும்பத்தினர் மூன்று பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய் தந்தையரை இழந்து தற்போது தனியாக இருக்கும் இந்துமதி மோனிகா ஸ்ரீ சுமிதா மற்றும் திலீப் ஆகிய நான்கு குழந்தைகளும் அனாதையாக வாழும் நிலையில் உள்ளனர். அனாதை ஆக்கப்பட்டுள்ள நான்கு குழந்தைகளுக்கும் உதவி செய்யுமாறு கனம் சேலம் மாநகர காவல் துறை ஆணையரை கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த சம்பவம் சேலம் வேடுகத்தாம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வின்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட துணை தலைவர் வசந்த் உட்பட பாதிக்கப்பட்டுள்ள நான்கு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



0 coment rios: