ஈரோடு சட்டக் கல்லூரியில் இளைஞர் பாராளுமன்றம் - மாணவர்கள் அரங்கேற்றிய மாதிரி நாடாளுமன்றம் நெகிழ்ச்சியூட்டியது
ஈரோடு சட்டக் கல்லூரியில் இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் சட்ட அறிவை மேம்படுத்தும் நோக்கில் இளைஞர் பாராளுமன்றம் சிறப்பாக நடைபெற்றது.
நாடாளுமன்ற அமர்வு போலவே ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நிகழ்வு, மாணவர்களின் திறமையையும் சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தியதாக அமைந்தது
நிகழ்ச்சியில், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.இ.பிரகாஷ், , மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஈஸ்வரசாமி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
கல்லூரி தலைவர் சிந்து ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணைத் தலைவர் காயத்ரி அருண்பாலாஜி வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து, இளைஞர் பாராளுமன்ற அமர்வு தொடங்கப்பட்டது.
"இந்த அமர்வு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் மற்றும் Bharatiya Nyaya Sanhita (BNS) ஆகியவற்றை உள்ளடக்கிய சட்டமன்ற விவகார மசோதாவை நிறைவேற்றும் நோக்கத்துடன் நடைபெற்றது. மாணவர்கள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியினராக பங்கெடுத்து விவாதத்தில் ஈடுபட்டனர்"
"40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்நிகழ்வில் விவசாயம், இரயில்வே, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, பழங்குடியினர் விவகாரங்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன"
"மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு கடுமையான தண்டனைகள் விதிப்பது குறித்தும் தீவிரமான கருத்துக்கள் பகிரப்பட்டன"
நிகழ்ச்சியில் உரையாற்றிய எம்பி கே.இ.பிரகாஷ் அவர்கள், போக்குவரத்து அமைச்சகத்தின் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
எம்பி ஈஸ்வரசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் மற்றும் பூஜ்ஜிய நேரம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைக் குறித்து தெளிவுபடுத்தினார். மாணவர்கள் நேரடியாக கேள்விகள் எழுப்பி விளக்கங்கள் பெற்றனர்.
போட்டியில் சிறந்து விளங்கிய வேதாம்பாள் மற்றும் சுஜனந்த் பாரத் ஆகியோர் முதல் பரிசையும், இளம்பிறை இரண்டாம் பரிசையும், இனியா பொன்னுசாமி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
வெற்றியாளர்களுக்கும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி முதல்வர் டாக்டர் அக்பர் அலி பெய்க் நன்றியுரை வழங்கினார்,
இளைஞர்களின் சிந்தனைத் திறன், சட்ட அறிவு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த புரிதலை வளர்த்த இந்த இளைஞர் பாராளுமன்றம், பங்கேற்ற அனைவருக்கும் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.



0 coment rios: