புதன், 25 பிப்ரவரி, 2026

அன் ரிசர்வேஷன் கோச்சில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் - கே.இ.பிரகாஷ் எம்.பி. வலியுறுத்தல்..!


முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ( அன் ரிசர்வேஷன் கோச்சில் ) கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் - 
கே.இ.பிரகாஷ் எம்.பி. வலியுறுத்தல்..!

ஈரோடு ரயில் நிலையம் வளாகம் மற்றும் நடைமேடைப் பகுதிகளில் மத்திய அரசின் ( AMRUT Bharat Scheme ) திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை, தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளரும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான கே.இ.பிரகாஷ் எம்.பி. இன்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பிறகு, நிலைய மேலாளர் மூர்த்தி அலுவலகத்தில் பயணிகள் அளித்த புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

முன்பதிவு இல்லாத (Unreserved) ரயில் பெட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக டிக்கெட் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். 

100 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டிய பெட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் ஏறுவதால் கடும் நெரிசல் உருவாகி, 

பயணிகள் மூச்சுத்திணறலுக்கும் அவதிப்படுவதாகவும், சில நேரங்களில் தகராறுகள் கூட ஏற்படுவதாகவும் தெரிவித்தார். 

குறிப்பாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் இந்த பிரச்சனை தீவிரமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தீர்க்க, ரயில் புறப்படும் நேரங்களில் தனி அலுவலரை நியமித்து, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகள் ஏற அனுமதிக்கக் கூடாது என்றும், முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற்றவர்களை அதே திசையில் செல்லும் அடுத்த ரயிலில் பயணிக்க அறிவுறுத்தும் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள சில கடைகளில் ஜிஎஸ்டி வசூலித்தும் முறையான பில் வழங்கப்படவில்லை எனவும், சில ரசீதுகள் போலியானவை எனவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளதாக கூறினார். 

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் உடனடி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் காலதாமதமின்றி, தரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆய்வின்போது கடைகளில் பொருட்கள் வாங்கிய எம்.பி., ரசீது பெற்றதுடன், அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமாக ரசீது வழங்க வேண்டும் என்றும், ரயில் நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: