சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு.
2026 சட்டமன்றத்திற்கான தேர்தல் ஏப்ரல் இறுதி மற்றும் மே முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் ஒவ்வொரு தலைப்புகளில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையும் அவ்வப்போது நடைபெற்று கொண்டு உள்ளது. இந்த நிலையில் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மற்றும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் மாநில தலைவர் நாகா.அரவிந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள், தமிழக மக்களிடம் பெற்ற வரவேற்பு ஆகியவற்றை பட்டியலிட்டு கூறிய அவர் தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான வெற்றி கூட்டணிக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு தங்களது முழு ஆதரவை வழங்குகிறது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை ஆட்சி கட்டிலில் அமர்த்த கூட்டமைப்பு தமிழக முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது சேலத்தில் பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்து வந்து தாங்கள் ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டதை போலவே இந்த தேர்தலிலும் தங்களது பிரச்சாரம் என்பது புதிய யுக்தியை பின்பற்றி இருக்கும் என்று குறிப்பிட்ட நாகா அரவிந்தன், சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்றும் குறிப்பாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுகவின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான பழனிச்சாமி டெபாசிட் இழப்பார் என்றும் ஆருடம் தெரிவித்தார்.
மேலும் திமுகவுக்கு தங்களது முழு ஆதரவு என்றும் இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தங்களது அமைப்பிற்கு சீட் கேட்க போவதில்லை என்று கூறியதோடு மட்டுமல்லாமல் நிபந்தனை அற்ற ஆதரவு திமுகவிற்கு வழங்குவதாகவும் நாகா.அரவிந்தன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலமுறை அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்த தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் மாநில தலைவர் நாகா.அரவிந்தன் தற்பொழுது, எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி அவர்கள் டெபாசிட் இழப்பார் என்று தெரிவித்துள்ளது சேலம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



0 coment rios: