நாமக்கல்,
S.K. சுரேஷ்பாபு.
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அறிவிப்பு வெளியிடாதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக TVK அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கருத்து.
தமிழக வேளாண் பட்ஜெட்டை, தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆனந்த் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சுமார் 2 மணி நேரம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்வேறு கோரிக்கைகளை ஏற்கனவே முன்வைத்து அதில் ஒரு கோரிக்கை கூட தமிழக அரசால் இந்த விவசாயிகளின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். வேலுச்சாமி தனது வரவேற்பு மற்றும் ஏமாற்றம் குறித்து அறிக்கையின் வாயிலாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
தமிழகத்தில் தவெக அரசின் 2026 -2027 ஆம் ஆண்டிற்கு உண்டான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டையில் இயற்கை வேளாண் கல்லூரி மற்றும் மாணவர்கள் பட்டையபடிப்பு வசதியும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும், கோவை மற்றும் திருச்சி பகுதியை மையமாக கொண்டு வேளாண் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதிக்கு அனுப்பும் மண்டலம் உருவாக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தமிழக விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிப் படி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500/ம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500/ ம் வழங்கப்படும், கூட்டுறவு பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்பன பற்றிய எந்த அறிவிப்பும் இன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கையில் இல்லை, மேலும் கூட்டுறவு பயிர் கடன் வழங்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.2000/கோடி குறைத்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதேப்போல காவிரி டெல்டா பகுதியில் பாசனத்திற்கும் தூர் வாருவதற்கும் கடந்த ஆண்டு ஒதுக்கிய அதே தொகையான ரூ.125 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, கூடுதல் ஒதுக்கீடு எதுவும் இடம்பெறவில்லை. தவெக அரசு விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அறிவிப்பு வெளியிடாதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.



0 coment rios: